×

சாத்தனூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள் பூங்காக்களை கண்டு ரசித்தனர் அரையாண்டு தொடர் விடுமுறையால்

தண்டராம்பட்டு, டிச. 27:
அரையாண்டு தொடர் விடுமுறையால் சாத்தனூர் அணையில் நேற்று சுற்றுலா பயணிகள் திரண்டனர். அங்குள்ள பூங்காக்களை சுற்றிபார்த்து மகிழ்ந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது. மிக பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன்விழா கண்ட சிறப்புக்குரியது. இங்கு ஆயிரக்கணக்கான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன. எழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், படகு சவாரி, மீன் கண்காட்சி, முதலைப் பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.

இந்நிலையில் பள்ளிகளுக்கு தற்போது அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சாத்தனூர் அணையில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர். அங்கு சாத்தனூர் அணையில் வினாடிக்கு 266 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சாத்தனூர் அணை 118.80அடியாக நீர் மட்டும் உயர்ந்துள்ளது. சாத்தனூர் அணைக்கு வரக்கூடிய உபரிநீர் ஒன்பது கண் மதகு வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். அங்குள்ள ஆதாம் ஏவாள் பூங்கா, தொங்கு பாலம், அறிவியல் பார்க், டைனோசர் பார்க், செயற்கை நீரூற்று, படகு குளம், முதலை பண்ணை, மயில் கூண்டு, முயல் கூண்டு ஆகிய இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். மேலும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தால் அணையில் இருந்து பிடிக்கப்படும் மீன்களை வாங்கி, அங்கேயே சமைத்து குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Tags : Sathanur dam ,Thandarampattu ,Tiruvannamalai district ,
× RELATED பீடி புகைத்த முதியவர் தீயில் கருகி பலி கட்டிலில் படுத்துக் கொண்டு