×

வீட்டிற்குள் லாரி புகுந்து மூதாட்டி உடல் நசுங்கி பலி மருமகள் உயிர் தப்பினார் பொன்னை அருகே பயங்கரம்

பொன்னை, டிச.27: பொன்னை அருகே வீட்டிற்குள் லாரி புகுந்து தண்ணீர் பிடித்து கொண்டிருந்த மூதாட்டி உடல் நசுங்கி பலியானார். அவரது மருமகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சின்னக்குழந்தை. இவரது மனைவி கங்கம்மா(82). மகன் முனிரத்தினம்(50). இவருக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சின்னக்குழந்தை உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் கங்கம்மா, தனது மகனுடன் வசித்து வந்தார். இவர்களது வீடு திருவலம்-பொன்னை மாநில நெடுஞ்சாலையோரம் உள்ளது. நேற்று காலை சுமார் 6 மணியளவில் கங்கம்மா தனது வீட்டின் காம்பவுண்ட்டிற்குள் உள்ள குழாயில் சமையலுக்காக தண்ணீர் பிடித்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது இவரது மருமகள் வீட்டின் பின்புறமுள்ள அறையில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். முனிரத்தினம் வீட்டின் பின்பகுதியில் உள்ள இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, பீகாரை சேர்ந்த விசுவதஜித் சவுபே, திருவலத்தில் இருந்து பொன்னை நோக்கி டிப்பர் லாரியில் சென்று கொண்டிருந்தார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, கங்கம்மா வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தது. இதில் காம்பவுண்ட் சுவர் மற்றும் வீட்டின் ஒரு பகுதி இடிந்து சேதமானது. மேலும் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த கங்கம்மா, லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து பலத்த சத்தம் கேட்டு வீட்டின் பின்புறத்தில் இருந்து ஓடிவந்த முனிரத்தினம், தனது தாய் லாரியின் சக்கரத்தில் உடல் நசுங்கி இறந்து கிடந்ததை கண்டு கதறியழுதார். மேலும், சமையல் அறையில் இருந்த கங்கம்மாவின் மருமகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பொன்னை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கங்கம்மாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் விசுவஜித் சவுபேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்குள் டிப்பர் லாரி புகுந்து மூதாட்டி உடல் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Lorry ,Ponnai ,Matandaguppam ,Vellore district ,Gangamma ,
× RELATED எருது விடும் விழா நடத்த அனுமதி கோரும்...