×

மங்களம் தருவாள் ஸர்வமங்களா !

அம்மன் ஆலயங்கள் பல இருந்தாலும் மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி ஆலயங்கள்தான் மூலஸ்தானம். அதே போல் சென்னை நங்கநல்லூரில் அமைந்துள்ள ஸர்வமங்களா ராஜராஜேஸ்வரி ஆலயம் தேவியின் மற்றொரு மூலஸ்தானமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஆலயம் சக்தி வாய்ந்த யந்திரங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்ட ஒரு வித்யா மந்த்ராலயமாகும். இந்த சக்தி பீடம் மந்த்ர சாஸ்திர அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள அம்பாளை தரிசித்தால் 51 சக்தி பீடங்களை தரிசித்த பலன் கிடைக்கும். திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் ‘ஏடங்கை நங்கை’ என்று இத்தலத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இக்கோயிலின் முக்கிய சிறப்பம்சம் திதி நித்யா தேவிகள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதுதான். இவர்கள் அம்மனை தரிசிக்க செல்லும் முன் அமைந்துள்ள 16 படிகளில் வீற்றிருக்கிறார்கள். தேவியை தரிசிக்க செல்லும் முன் படிகளில் வீற்றிருக்கும் திதி நித்யா தேவியினரை வணங்கிச் செல்வது இக்கோயிலின் ஐதீகம். இவர்கள் ஒவ்வொரு படிகளிலும் யந்திரத்துடன் ஆட்சி செய்து வருகிறார்கள். திதி தேவிகளை வணங்கி இரவு நேரத்தில் பூஜை செய்வதன் மூலம் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கும்.

குங்குமம் போடும் விசேஷம்!

குடும்பத்தில் தோஷம் இருந்தால், அதை நீக்க குங்குமம் போடுவது இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாகும். ஆலயம் செல்லும் முன் குங்குமத்தை பெற்று திதி தேவிக்காக வைக்கப்பட்டுள்ள பெட்டியில் வேண்டுதல்களை எண்ணி குங்குமத்தை போட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

ஆலயத்தில் அம்பாள் சந்நதியை இடமாகச் சுற்றி வரவேண்டும். காரணம், அம்பாளுக்கு வித்யாபகரமாக சந்நதி அமைக்க பூப்ரஸ்தாரம், கைலாசப்ரஸ்தாரம், மேருப்ரஸ்தாரம் என்ற மூன்று கட்டட முறையில் ஏதாவது ஒன்றை பின்பற்ற வேண்டும். அதன்படி அமைந்துள்ள விதிமுறைகளை மீறாமல் ஆலயம் அமைத்து, அம்மனை பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.

காஞ்சியில் காமாட்சி அம்மன் சந்நதி பூப்ரஸ்தார விதிப்படி கட்டப்பட்டுள்ளது. இவ்வாலயம் மேருப்ரஸ்தார விதிப்படி கட்டப்பட்டுள்ளது. இத்தலத்தில் உற்சவமூர்த்தி ஸ்வயம்புவாக அக்னி குண்டத்தில் இருந்து வெளியானதாக கூறப்படுகிறது. கலியுகத்தில் ராஜகோபால ஸ்வாமிக்கு யாகம் செய்த போது அக்னியில் இருந்து கற்களாய் வெளிப்பட்டு பின்னர் விக்ரஹமாக உருவானது.

இங்குள்ள தீர்த்தம் வருண தன்வந்த்ரி தீர்த்தமாகும். விஷ்ணுவை எண்ணி வருணன் தவமிருக்க, விஷ்ணு இத்தலத்தில் தீர்த்த ரூபத்தில் கோயில் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தீர்த்தம் பெரும் நோய்களை தீர்க்கும் வல்லமைக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை சுக்ல பக்‌ஷ பஞ்சமியில் அம்பாளுக்கு தீர்த்தவாரி இத்தீர்த்தில் நடைபெறும். அம்பாளை தரிசித்தால் மனசும் ேலசாகி, தெளிவு ஏற்படும் என்பதில் ஐயமில்லை!

பிரியா மோகன்

The post மங்களம் தருவாள் ஸர்வமங்களா ! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Meenadashi ,Kanji ,Kamadasi ,Kashi Visaladasi ,Sarwamangala Rajarajeswari Shrine ,Nanganallur, Chennai ,
× RELATED அருள்மிகு வலுப்பூரம்மன் கோயில்!