×

அருளாளர்களை எப்படி அடையாளம் தெரிந்து கொள்வது?

அருளுக்கு அடிப்படை அன்புதான். அன்பின் நீட்சிதான் அருள். அன்பு அற்புதமான மலர் போல பூக்கும். அருள் மலர்ந்து காயாகி கனியாகி இனிக்கும். அன்பு உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் என்ன வேறு பாடு என்பதை திருவள்ளுவர் விளக்குகின்றார்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு

அன்பு இல்லாதவன் எல்லாப் பொருட்களையும் தன்னுடைய பொருளாகவே நினைப்பான்; சுயநலம் மட்டுமே அவனுடைய செயலிலும் வார்த்தையிலும் ஓங்கி இருக்கும். ஆனால், அன்புள்ளவன் தன்னுடைய எலும்பைக்கூட பிறருக்கு உதவியாகக் கொடுத்து விடுவான். புராணத்திலே ததீசி முனிவரின் கதை இதைத்தான் பேசுகிறது. தேவர்களிடத்தில் அன்பு கொண்ட அவர், அவர்கள் நல்வாழ்வுக்காக, உயிர்த்தியாகம் செய்து, தன்னுடைய முதுகு எலும்பையே அவர்களுக்கு வழங்குகிறார். இந்த உலகத்தில் யாரெல்லாம் இன்புற்று வாழ்கிறார்களோ, அவர்கள் வாழ்க்கையில் அன்பு இருக்கும். திருவள்ளுவர் இன்னும் ஓங்கி சொல்லுகின்றார். அன்பு வழியில் வாழ்பவர்கள்தான் உயிரோடு வாழ்பவர்கள். அப்படி இல்லாதவர்கள் எலும்பை மறைக்கும் தோலைப் போர்த்திக் கொண்டு இருப்பவர்கள்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு
– என்கிறார் வள்ளுவர்.

அன்பு ஓங்கி அருளாக மாறிய நிலையில்தான், திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் பயிர்களின் வாட்டத்தைக் கண்டு தன்னுயிர் வாடினார்.

“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர் என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்’’

– என்ற பாடல் அவர் கொண்ட அருளின் வெளிப்பாடு.

வள்ளலாரின் அன்பு, அருளாக நீட்சி பெற்ற கனிந்த நிலையைத் தான் மேற்கண்ட பாடல் நமக்குத் தெரிவிக்கிறது. ராமானுஜர் சீடர் கூரத்தாழ்வான், ஒரு வாழை இலையை அறுக்கும் பொழுது அதில் இருந்து ஒழுகும் நீரை, அந்த வாழை மரத்தின் கண்ணீராகக் கருதி மயங்கி விழுந்தார். அன்பு நிலை அவரை அப்படி விழ வைத்தது. எம்பார் என்று ஒரு வைணவப் பெரியார் இருந்தார். அவர் ஒரு நாள் வேலி ஓரமாக அமர்ந்து கையில் ஓர் பாம்பை வைத்துக்கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்ததைக் கண்ட ராமானுஜர், ‘‘இந்த விஷப் பாம்பை வைத்துக்கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறீர்?’’ என்று உரத்த குரலில் கேட்க, அப்போது எம்பர் சொன்னார்; ‘‘சுவாமி, இந்தப் பாம்பு இரைஉண்ண முடியாமல் சங்கடத்தில் சுருண்டு கிடக்கிறது. இதென்ன இப்படி இருக்கிறதே என்று நோக்கிய பொழுது அதனுடைய வாயில் ஏதோ ஒரு முள் தைத்து இருந்தது. அந்த வேதனையால் பாம்பு துடிப்பது கண்டு அதன் வாயில் தைத்திருந்த முள்ளை எடுத்து வெளியே போட்டேன்’’ என்று சொன்னாராம். விஷமுள்ள பாம்புக்குக்கூட வைத்தியம் பார்க்கின்ற அன்பு நிலை அருள்நிலையாக மாறிய சம்பவம்தான் இது. விஷப்பாம்பு தன்னைக் கடித்து விடுமே என்ற அச்சம் அவருக்கு இல்லை. இதைத்தான் திருவள்ளுவரும் ஒரு
குறட்பாவில் சொல்லுகின்றார்;

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை

பிற உயிர்களைக் காத்து, அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது என்கிறார். இந்த நிலையில் இருப்பவர்களைதான் அருளாளர்கள் என்று அழைக்கிறோம். அன்புக்கும் அருளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இல்லை. மழை பெய்கிறது. அந்த மழைநீர் தரையில் ஒரு தடத்தை ஏற்படுத்திக் கொண்டு ஓடுகிறது. அந்தத் தடம் தான் அன்பு. அது கொஞ்சம் கொஞ்சமாக பெருகிப் பெருகி, ஓடையாக மாறி, பிறகு சிறு கால்வாயாக மாறி, பிறகு சிற்றாறாக மாறி, பெரிதாகி, பேராறாக மாறி உயிர்கள் அத்தனைக்கும் பயன்படும் நிலையை அடைகின்ற பொழுது, அருளாகத் தெரிகிறது. அன்பு என்கிற ஆரம்ப நிலை. சில உயிர்களுக்குத்தான் பயன்படும். அருள் என்கிற நிலை முழுமையான சமூகத்துக்குப் பயன்படும்.

அருளின் ஆரம்ப நிலை அன்புதான் என்பதை மறந்து விடக் கூடாது. அன்பில்லாதவன் அருளாளன் ஆக மாற முடியாது. அருளாளர்கள் இடத்திலே அன்பு என்பது இயல்பாக இருக்கும். அன்பு, இனம், மதம், ஜாதி, மொழி, நாடு என்ற அத்தனை எல்லைகளையும் கடந்து பிரகாசித்துக் கொண்டிருக்கும். இந்த பிரகாசத்தைத்தான் அருளாளர்களின் முகத்திலே நாம் ஒரு ஒளிவட்டமாகக் காண்கிறோம். தேஜஸ் என்று சொல்வார்கள். ஒரு நல்ல காரியத்தைச் செய்கின்ற பொழுது இந்த உத்தமமான ஒளியானது ஒவ்வொருவரிடத்திலும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். கடவுளுக்கேகூட படைப்புத் தொழிலை ஏற்படுத்திய உடன், குழந்தையைப் பெற்றெடுத்த தாய் உடலில் எப்படி ஒரு ஒளி தோன்றுமோ, அப்படி இறைவனிடத்திலே ஒளி (புகர்) தோன்றியது என்று பெரியவர்கள் சொல்லுகின்றனர்.

அருளாளர்களின் இன்னொரு சிறந்த அடையாளம், அவர்கள் தங்களைப் பெரிதாக விளம்பரப் படுத்திக் கொள்ள மாட்டார்கள். திருநாவுக்கரசர் வாழ்க்கை வரலாற்றில் இதை நாம் காணலாம்.அப்பூதி அடிகள் திங்களூரில் வாழ்ந்த அடியார், திருநாவுக்கரசர் மீது காணாமலேயே காதல் கொண்டு, அவருடைய பெயரிலேயே தானதர்மங்கள் செய்து கொண்டிருந்தார். திருநாவுக்கரசர் அங்கு தன் பெயரில் நடக்கும் தர்மங்களை பார்த்துவிட்டு ‘‘ஏன் உம்முடைய பெயரில் தானம் செய்யாமல் யாரோ ஒருவருடைய பெயரிலே தானம் செய்து கொண்டிருக்கிறீர்?’’ என்று கேட்ட பொழுது, திருநாவுக்கரசர் மீது அப்பூதி அடிகள் சினம் கொள்ள, பிறகு ‘‘தான் தான் அந்த திருநாவுக்கரசன்’’ என்று அவரிடம் அறிமுகம் செய்து கொண்டாராம்.இந்த எளிமைதான் அருளாளர்கள் இலக்கணம். திருக்கோட்டியூர் நம்பிகள் என்று ஒரு ஆச்சார்ய புருஷர் திருக்கோட்டியூரில் வாழ்ந்து வந்தார். ராமானுஜரின் குரு அவர். ஆனால் தன்னை எங்கும் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். ஒரு நாள் அவரிடம் சில வெளியூர் வைணவர்கள்;

‘‘திருக்கோட்டியூர் நம்பிகளைச் சேவிக்க வேண்டும். அவர் இல்லம் எங்கு இருக்கிறது?’’ என்று அவரிடமே கேட்க, உடனே நம்பிகள்; ‘‘அவர் என்ன அத்தனை பெரிய ஆளா அவரை சேவிப்பதற்கு? நீங்கள் பெருமாளைச் சேவித்து விட்டு ஊர் செல்லுங்கள். அவரை சேவித்து வீணாகக் காலத்தைக் கழிக்காதீர்கள்’’ என்று சொல்ல; ‘‘இவர் திருக்கோட்டியூர் நம்பிகள் மீது பொறாமை கொண்டவர் போல் இருக்கிறது’’ என்று அந்த யாத்திரிகர்கள் கோயிலுக்குச் சென்று விட்டார்களாம். அங்கே தீர்த்த பிரசாதம் தருகின்ற பொழுது, திருக்கோட்டியூர் நம்பிகளுக்கு அருளப்பாடு நடக்க, அப்பொழுது தீர்த்தம் வாங்கிக் கொள்ள நம்பிகள் வருகின்ற பொழுது; ‘‘ இவர்தான் திருக்கோட்டியூர் நம்பிகள். ஆனால் விசாரித்தபோது தன்னைப் பற்றி எதுவுமே சொல்லிக் கொள்ளவில்லையே. இத்தனை அடக்கமா இவர்’’ என்று திகைத்துப் போனார்களாம். அருளாளர்களை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு இந்த அடக்க குணம் முக்கியம்.

 

Tags : Thiruvalluwa ,Tamakuriya ,
× RELATED வருட இறுதியில் ஒரு சுயபரிசோதனை