?சிவபெருமான் புலித்தோலை ஏன் தரித்திருக்கிறார்?
– ஆர்.கே.லிங்கேசன்,மேலகிருஷ்ணன் புதூர்.
தாருகாவனத்து முனிவர்கள் பிக்ஷாடனராக ஆடையின்றி வரும் இளைஞன் சிவபெருமான்தான் என்பதை அறியாமல், அவர் மீது புலியை ஏவ, அதனை வதம் செய்து அதன் தோலை எடுத்து பரமேஸ்வரன் ஆடையாக அணிந்து கொண்டார் என்று புராணக்கதை சொன்னாலும் தத்துவார்த்தமாகக் காணும்போது, புலி என்பது காலத்தின் அடையாளமாக உருவகப்படுத்தப்படுகிறது. அந்த காலத்தினைக் கடந்தவன் இறைவன் என்பதன் அடையாளமாக புலித்தோலை ஆடையாக அணிந்திருக்கிறார். பரமேஸ்வரன் என்று ஞானியர் விளக்கம் சொல்வர். அதனால்தான் சந்யாசிகள், தவசீலர்கள் புலித்தோலின் மீது அமர்ந்து தியானம் செய்வார்கள்.
?சிவபெருமானுக்கு செம்பருத்திப்பூ சூடக்கூடாது என்கிறார்களே? ஏன்?
– ஜி.காயா, கன்னியாகுமரி.
சிவபெருமானுக்கு தாழம்பூவினைக் கொண்டு அர்ச்சனை கிடையாது என்பதை சாஸ்திரம் வலியுறுத்துகிறது. பிரம்மாவிடம், சிவனின் முடியைக் கண்டதாக தாழம்பூ பொய்சாட்சி சொன்னதால், சிவபூஜைக்கு அருகதை அற்றது என தாழம்பூ சாபம் பெற்றதாக புராணம் சொல்கிறது. ஆனால், செம்பருத்திப்பூவை சிவபூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என்ற கருத்திற்கு ஆதாரம் இல்லை. செம்பருத்தி, நந்தியாவட்டை முதலிய மலர்கள் ஆலய நந்தவனத்திலேயே பராமரிக்கப்படுகின்றன. மேலும், செம்பருத்திச் செடியை “பைசெக்சுவல் ப்ளான்ட்’’ அதாவது ஆண் – பெண் ஆகிய இரு தன்மையும் ஒருங்கே இணையப்பெற்றதாகச் சொல்வார்கள். இந்த உண்மையை செம்பருத்திப்பூவைக் கண்டாலே புரிந்து கொள்ளலாம். அந்த மலரிலே மேலே நீட்டிக்கொண்டிருக்கும். காம்பு போன்ற பகுதியும், அதன் மேலே புள்ளி புள்ளியாகக் குவிந்திருக்கும் மகரந்தத் துகள்கள் ஆண் தன்மையையும், கீழே சூலகவட்டமாக அடர்ந்திருக்கும் பகுதி பெண் தன்மையைக் கொண்டதாகவும், தாவரவியல் ஆய்வாளர்கள் சொல்வார்கள். ஆன்மிகத்தைப் பொறுத்த வரை இது சிவசக்தி ஐக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஆக, இந்த மலர் முழுக்க முழுக்க சிவபூஜைக்கு உகந்த மலரே ஆகும். இதில் எந்தவிதமாக சந்தேகமும் இல்லை.
?எந்த பொருளை தானமாகக் கொடுக்கக் கூடாது? பெறக்கூடாது?
– த.சத்தியநாராயணன்,அயன்புரம்.
ஆயுதங்கள், சுத்தம் செய்யக்கூடிய துடைப்பம் முதலான பொருட்கள், பழைய உணவு, பழைய உடை ஆகியவற்றை தானமாகக் கொடுக்கக்கூடாது. இதே பொருட்களை தானமாகப் பெறவும் கூடாது. அதே நேரத்தில், உணவு மற்றும் உடைகளை தர்மமாகக் கொடுக்கலாம். தானம் வேறு தர்மம் வேறு. பலனை எதிர்பார்த்துச் செய்வது தானம். பலனை எதிர்பாராமல் செய்வது தர்மம் என்பதால், உணவு மற்றும் உடை விஷயங்களில் தர்மம் செய்வதில் விதிவிலக்கு என்பது உண்டு.
?இரவு தூக்கத்தில் என்னுடைய தந்தை தாய் கனவில் வருவது நல்லதா?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.
பொதுவாக, உயிருடன் இருப்பவர்கள் கனவினில் வந்தால் நாம் அவர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தரவேண்டும் அல்லது அவர்களைச் சென்று சந்திப்பதன் மூலம் பல நன்மைகளை அடைய முடியும். இறந்தவர்கள் கனவினில் வந்தால், அவர்களுக்கு உரிய கடமைகளைச் சரிவர செய்ய வேண்டும், முன்னோர் வழிபாட்டினை முறையாக மேற்கொள்ள வேண்டும். பொதுவாக மனிதர்கள் கனவில் வந்தால், அவர்கள் மூலமாக ஏதோ ஒரு நன்மை நடக்கப்போகிறது என்றுதான் பொருள். கவலை வேண்டாம்.
?காலையில் விழித்து எழுந்ததும், சாமி படங்களின் முகத்தில் விழிக்கலாமா?
– எஸ்.கதிரேசன், வேலூர்.
தூங்கி எழுந்ததும், காணத்தக்கவை என்று பஞ்சாங்கத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். தாமரைப்பூ, சூரியன், பொன், அரசன், தீபம், கண்ணாடி, தணல், சந்தனம், கடல், வயல், சிவலிங்கம், கோபுரம், மேகம் சூழ்ந்த மலை, கன்றுடன் கூடிய பசு, கருங்குரங்கு, தனது வலது கை, மனைவி, மிருதங்கம் ஆகியவற்றை உறங்கி எழுந்தவுடன் காண்பது நன்மை தரும்.
?உயிர் நண்பரின் இறந்துபோன பெற்றோரின் படத்தை என் வீட்டில் வைத்து பூஜை செய்து திதி கொடுக்கலாமா?
– மா.பா.சங்கரநாராயணன்,புதுக்கோட்டை.
பொதுவாக திதி கொடுக்கும்போது இறந்தவர்களின் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற விஷயங்கள் திரைப்படங் களில் காட்சிப்படுத்தப்படுவதால் நாம் அதையே உண்மை என நம்பி பின்பற்றி வருகிறோம். இறந்தவர்களை மனதில் தியானித்துத்தான் சிராத்தம் செய்ய வேண்டும். படங்களை வைத்து அல்ல. இதுபோக உயிர் நண்பரின் இறந்துபோன பெற்றோருக்கு நீங்கள் திதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இறந்தவர்களின் வாரிசுகள்தான் வருடந்தோறும் வரக்கூடிய சிராத்தத்தைச் செய்ய இயலும். அதுபோல இறந்தவர்களில் உங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு, புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளயபட்ச காலத்தில் வேண்டுமானால் திதி கொடுக்கலாம். மற்றபடி அவர்களுடைய நினைவு நாளில் வாரிசுகள் மட்டுமே சிராத்தத்தைச் செய்ய இயலும்.
?பல தலைமுறைக்கு முன் செய்த பாவம் இன்றைய சந்ததியை பாதிக்குமா?அதிலிருந்து விடுபட வழி என்ன?
– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
பல தலைமுறைக்கு முன் சேர்த்த சொத்தினை அனுபவிக்கும்போது, அவர்கள் சம்பாதித்த பாவத்தினையும் அனுபவித்துத்தானே ஆக வேண்டும். இங்கே சொத்து என்று சொல்வது அவர்கள் செய்த புண்ணியத்தினை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். முன்னோர்கள் செய்த பாவத்திலிருந்து விடுபட தானங்கள், தர்மங்களை விடாமல் செய்து வருவதே ஒரே வழி. பாவம் என்பதுவங்கியில் பெறும் கடன் தொகை போல. அதற்கு வட்டி விகிதம் என்பது அதிகம். தான தர்மங்கள் மூலமாக சேர்க்கும்புண்ணியம் என்பது சேமிப்பு கணக்கு போல. அதற்கு வட்டி விகிதம் என்பது குறைவு. ஆக, சேமிப்புக் கணக்கில் தொகை உயர்ந்தால் மட்டுமே அதனைக் கொண்டு கடன் தொகையை அடைக்க முடியும் அல்லவா. அதனை நினைவில் கொண்டு நம்மால் இயன்ற வரை, தான தர்மங்களை அதிகமாகச் செய்து வாருங்கள். முன்னோர்கள் செய்த பாவத்திலிருந்து விடுபடுவதோடு அடுத்த தலைமுறைக்கு புண்ணியத்தையும் சேர்த்து வைப்பீர்கள்.
