×

இசை கேட்டால் தலை ஆடும்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 110 (பகவத்கீதை உரை)

யோகம் கிட்டுவது என்பது பரமானந்த அனுபவம். இந்த அனுபவத்தை அடைந்த பல யோகிகள் அரூபமாக இன்றும் உலவுகிறார்கள் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது. திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர் என்பார்கள். இன்றும்கூட, பௌர்ணமி இரவில் திருவண்ணாமலை கிரிவலம் வரும் அன்பர்களில் சிலர் யோகிகளின் (சித்தர்களின்) இருப்பை உணர்கிறார்கள்!
எகிப்து நாட்டில் சூஃபி யோகி ஒருவர், தான் சமாதி நிலையை அடையப் போவதாகவும், ஆனாலும் நாற்பது ஆண்டுகள் கழித்து அந்த சமாதியைத் திறந்து பார்த்தால் தான் உயிருடன் இருப்பதாகவும் அறிவித்தார்.

1880 ஆம் ஆண்டு வாக்கில் இப்படி ஒரு அறிவிப்பைக் கேட்ட யாரும் அதை ஏளனமாகவே கருதவில்லை; நம்பிக்கை கொண்டார்கள். ஆனால் அந்த அறிவிப்பைக் கேட்டவர்களில் அநேகமாக யாருமே 1920ஆம் ஆண்டில் உயிருடன் இல்லை; அப்படியே இருந்தாலும் மிகவும் வயதானவர்களாக, அந்த விஷயத்தையே மறந்து போனவர்களாக இருந்தார்கள். இளைஞர்களுக்கு அவர்களுடைய மூதாதையர் யாரும் சொல்லாததால், இந்த விஷயமே தெரியாமல் இருந்தது.

ஆனால் அரசாங்க ஆவணப் பகுதியில் வேலை பார்த்த ஒருவர், தற்செயலாக, பழையப் பதிவுகளை ஆராய்ந்தபோது இந்த அறிவிப்பைக் கண்டார். அதைத் தன் மூத்த அதிகாரிகளிடம் தெரிவிக்க, அவர்களும் ஓர் ஆர்வத்தில், அந்த யோகி சொன்னது உண்மையாக இருக்குமோ என்று பரிசோதிக்க விரும்பினார்கள். அதன்படியே அவருடைய சமாதியைத் திறந்து பார்த்தால் – யோகி நாற்பது வருடங்களுக்கு முந்தைய அதே உடல் அமைப்புடன், மெலிதான சுவாசத்துடன் அமர்ந்திருந்தார்!

அனைவருக்கும் பேராச்சரியம்! ‘‘இது எப்படி சாத்தியமாயிற்று?’’ என்று அவரிடம் கேட்டார்கள். ‘‘எனக்கு பிராணாயாமத்தின் ஒரு பிரயோகத்தில் நல்ல பயிற்சி உண்டு. சுவாசத்தை வசப்படுத்தும் சிறு பிரயோகம் அது. வேறெதையும் நான் இந்த சமாதிக்குள் பயிற்சிக்கவில்லை.” என்று வெகு இயல்பாக பதிலளித்தார். அந்த சமாதிக்குள் 40 ஆண்டுகளுக்கு முந்தைய அவருடைய தோற்றத்தைக் காட்டும் ஓவியம் ஒன்று இருந்தது. அந்த ஓவியத்துக்கும், அவருடைய இப்போதைய உருவத்துக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை!

மெல்ல வெளியே வந்த யோகி, அதற்குப் பிறகு ஒன்பது மாதங்கள்வரை உயிரோடு இருந்தார். இந்த ஒன்பதுமாதங்களில் நாற்பதாண்டுகால வயது முதிர்ச்சியும், வயோதிகமும் அவரைப் பற்றிக் கொண்டன. இப்படியும் ஒரு யோகி வாழ்ந்திருக்கிறார்! இந்த சுவாசம், உயிர் மூச்சுதான் நம் சித்தத்தை திடமாக்குகிறது. அதுதான் பரமானந்த அனுபவம். My Autobiography என்று தன் சுயசரிதையை புத்தகமாக எழுதியிருக்கிறார் இத்தாலியின் சர்வாதிகாரியாக விளங்கிய முசோலினி. அதில், சுவாசம், அதன் பலனான சித்தம், இதன் பயனான ஒலி ஆகியவற்றோடு ஏற்பட்டிருந்த அனுபவம் ஒன்றை விவரிக்கிறார்:-

இந்தியாவைச் சேர்ந்தவர் ஓம்காரநாத் தாகூர் என்ற கஸல் இசை வல்லுனர். 1933ம் ஆண்டு வாக்கில் இவர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். பொதுவாகவே நல்ல இசையில் ஆர்வம் கொண்டிருந்த முசோலினி, அவரைத் தன்னுடைய விருந்தாளியாக வருகை தருமாறு அழைத்தார். தாகூரும் அவ்வாறே சென்று, ராஜோபசாரம் அடையப் பெற்றார். அவரிடம் முசோலினி, ‘‘உங்கள் கிருஷ்ணன் குழலூதினான் என்றால், வன விலங்குகளும் அப்படியே கிறங்கிப் போகுமாமே! ஆவினங்கள் எல்லாம் வந்து அவனைச் சூழ்ந்து கொள்ளுமாமே! மழை அறிகுறி இல்லாமலேயே மயில்கள் தோகை விரித்து ஆடுமாமே! அப்படியா, இதெல்லாம் இசையில் சாத்தியமா?” என்று கேட்டார்.

‘‘தெய்வீக அம்சம், எங்கள் கண்ணனின் சுவாசம். அது குழலுக்குள் புகுந்து வெளியே வரும்போது தேவகானமாக ஒலிக்கிறது. அதற்கு விலங்குகளும் தலையசைத்து அடிமையாவது உண்மை. கிருஷ்ணன் என்றில்லை, குரலால் அன்றி, குழலால் வெளிப்படும் சங்கீதம் அற்புதமானது. யாருமே அந்தக் காற்று ஒலிக்கு மயங்குவது இயல்புதான்,” என்று பதிலளித்தார் தாகூர்.
‘‘அப்படியென்றால், உங்களால் இப்போதே அவ்வாறு என்னை மயங்க வைக்க முடியுமா?” என்று கேட்டார் முசோலினி.

தாகூர் சற்று யோசித்தார். இசை உபகரணங்கள் எதுவும் அப்போது கைவசம் இல்லை. ஆனால் எதிரே பீங்கான் கோப்பைகளும், ஸ்பூன், ஃபோர்க் ஆகியவையும் இருந்தன. கோப்பைகளில் சிலவற்றில் திரவம் ஊற்றப்பட்டிருந்தது. ஒன்றிரண்டில் சர்க்கரை இருந்தது. தாகூர் ஸ்பூனையும், முள் கரண்டியையும் எடுத்துக் கொண்டார். அந்தக் கோப்பைகளின் விளிம்பில் மெல்லத் தட்டினார். அவற்றுக்கிடையே சுருதி பேதமின்றி, ஒலி சேர, கொஞ்சம் கொஞ்சமாக, மெதுவாகவும், வேகமாகவும், இழைத்தும் கரண்டிகளால் அவற்றிலிருந்து இனிய கானத்தைப் பிறப்பித்தார். ஆரம்பத்தில் அவருடைய செயலை கிண்டலாக வேடிக்கை பார்த்த முசோலினி, நேரம் ஆக, ஆக தானே அறியாமல் தலையாட்டத் தொடங்கினார். தாகூரின் கரங்கள் வேகத்தைக் கூட்ட, கூட்ட, முசோலினியின் தலை அதே வேகத்தில் ஆடியது. ஒரு கட்டத்தில், ‘‘போதும், நிறுத்துங்கள். தலையாட்டலை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை,” என்று கத்தினார் முசோலினி. காற்று ஏற்படுத்தும் ஒலி, கடின மனம் கொண்டோரையும் கரைக்கும் என்பது யதார்த்தம்தானே! இது சுவாசப் பயிற்சியால் அன்றி சாத்தியமில்லை. இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் யோகி, தான் மட்டுமல்லாமல் தன்னைச் சார்ந்தவர்களையும் ஆனந்தத்தில் ஆழ்த்துவது என்பதும் சாத்தியமே!

யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகினோ யதஸித்தஸ்ய யுஞ்சதோ யோகமாத்மன (6:19)

‘‘ஆத்ம தியானம் பழகுகிற யோகியின் மனது அடங்கியிருக்கிறது. இது எத்தகையது? காற்றில்லா இடத்தில் அலையாத தீப ஜோதி போன்றது.’’காற்று வீசாத இடத்தில் தீபம் நின்று நிலைத்து எரிகிறது. அதாவது, மனம் அடங்கியிருக்கிறது; ஆன்ம யோகமும் நிலைத்திருக்கிறது. இந்த தீபத்தின் தன்மையை நம் கோயில் ஒன்றிலும் நாம் நேரடியாகக் காணலாம்.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் சேவை சாதிக்கிறார் நம்பிப் பெருமாள். இவருடைய கோயில் வளாகத்தில் காலபைரவருக்குத் தனியே ஒரு சந்நதி இருக்கிறது. இந்த பைரவர் சராசரியாக ஓர் ஆள் உயரத்தில் நின்று கொண்டிருக்கிறார். இவருக்கு இடப்புறத்தில் ஒரு விளக்குத் தூண் அமைந்திருக்கிறது. இதில் மேலே பைரவர் முகத்தைப் பிரகாசிக்கச் செய்யும் வகையில் ஒரு விளக்கும், கீழ்ப்பகுதியில் காலருகே ஒரு விளக்கும் தீபம் தாங்கி நிற்கின்றன.

இது, வழக்கமான எல்லா கோயில் சந்நதிகளிலும் காணக்கூடிய அமைப்புதான். ஆனால் இங்கோ தீபத்தில் ஒரு சூட்சுமம் அடங்கியிருக்கிறது. ஆமாம், கால் பகுதி தீபம் அணையாமல் அப்படியே நின்று எரிகிறது; ஆனால் மேல் ஜோதி மட்டும் முன்னும், பின்னுமாக அசைகிறது. அட, என்ன மாயம்! பைரவர் விடும் மூச்சுக் காற்றின் அலைக்கழிப்புதான் இது என்று விளக்கம் கிடைக்கும்போது, வியக்காமல் இருக்க முடியாது! கால் பகுதியில் காற்றோட்டம் இல்லை; அதனால் விளக்கில் சலனமில்லை; அதே சந்நதியின் மேல் பகுதியிலும் காற்றோட்டம் இல்லைதான்; ஆனால் பைரவர் சுவாசிக்கிறார்! அதனால் மூச்சுக் காற்று தீபத்தை அலைக்கழிக்கிறது! அல்லது அந்தப் பகுதியில் எங்கோ வழி கிடைக்க, காற்று போய் வருகிறது என்றும் வைத்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் மனம் அலைபாயும்போது யோகம் சித்திக்காது என்பது புலனாகிறது. ஒலிகள் நம் சித்தத்தைத் தடம் புரள வைக்கின்றன. சாலையில் ஏதோ நினைவில் போய்க் கொண்டிருக்கும்போது, பின்னால் வரும் வாகனத்தில் ஹாரன் ஒலி நம்மைத் தடுமாற வைக்கிறது. அதாவது சித்தத்தைக் கலைக்கிறது. அந்த ஒலியைக் காற்று தாங்கி வருவதால், சித்த சிதைவுக்கு அந்த ஒலியே காரணமாகிறது. வாகன ஒலியை ஏற்கெனவே அடையாளம் தெரிந்து வைத்திருப்பதும், அதை எதிர்பார்ப்பதுமாக மனதைப் பழக்கிவிட்டால், அந்த ஒலி, மனதை – சித்தத்தை – பாதிக்காது, அலையாத ஜோதிபோல! இது ஆழ்ந்த தியானப் பயிற்சியின் பலன்.

‘‘தியானத்தில் முதிர்ந்தவனுக்கு முக்தி வெகு சமீபம்’ என்பது ஒரு பழமொழி. தியானத்தில் ஒரு மனிதனுக்கு எப்போது முதிர்ச்சி உண்டாகிறது தெரியுமா? அவன் தியானத்துக்கு உட்கார்ந்தவுடன், திவ்ய தேஜஸ் அவனைச் சுற்றிக் கொள்கிறது. அவனுடைய ஆன்மா ஈஸ்வரனுடன் கலந்து கொள்கிறது,” என்று உபதேசிக்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

சிலர் சொன்னால், சொன்னபடி நடக்கும். அவர்களுடைய அனுமானம் பலிக்கும். அவர்களுடைய யோசனை நற்பலன்களைத் தரும். எப்படி? அத்தகையவர்களை ஆழ்ந்து கவனியுங்கள் – அவர்கள் பெரும்பாலும் அமைதியானவர்களாகவே இருப்பார்கள். தன்னைச் சுற்றிலும் நடப்பனவற்றை அவர்கள் கவனிக்கிறார்கள். அவற்றில் தங்கள் யோசனையைச் செலுத்துகிறார்கள். தாங்கள் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், அந்தச் சுற்றுச் சூழல் அவர்களுக்கும் ஓர் அனுபவமாகிவிடுகிறது. இது போன்ற அனுபவங்கள் தரும் ஞானத்தால் அவர்களால் பலனளிக்கக் கூடிய யோசனைகளைத் தர முடிகிறது.

வரப்போவதை ஊகித்துச் சொல்லும் ஆற்றல், தாங்கள் பயின்ற மூச்சுப் பயிற்சியால், தியானத்தால், ஆன்ம யோகத்தால் கிட்டிவிடுகிறது! பளிச், பளிச்சென்று யோசனைகள் சொல்லி, சிலர் ‘இண்டலிஜன்ட்’ ஆக விளங்குவதற்கும் இதுதான் காரணம். ஆனால் அவர்கள், இப்படி ஓர் ஆற்றலை எதிர்பார்த்துப் பயிற்சி மேற்கொள்ளவில்லை என்பதையும் தங்கள் ஆன்ம சுகத்துக்காக மேற்கொண்டதுதான் அது என்பதையும் கவனிக்க வேண்டும்.

மிகப் பெரிய பாறைகள் சேர்ந்து, குன்றாகக் காட்சியளித்த பகுதி ஒன்று இருந்தது. அங்கே மாளிகை கட்ட நினைத்தான் செல்வந்தன் ஒருவன். முதலில் அந்தப் பாறைகளை அகற்ற வேண்டும். எத்தனை செலவாகும்? லட்சக்கணக்கில். அதற்குப் பிறகு மாளிகை கட்டும் செலவும் பூதாகரமாக ஆகும். என்ன செய்யலாம்? பொறியாளர்கள், கட்டடக் கலை நிபுணர்கள் எல்லோரும் செலவை லட்சத்தைக் கோடியாகத்தான் உயர்த்தினார்களே தவிர, சிக்கன யோசனை சொல்லவில்லை; அதற்கான உத்தி தெரியவில்லை.

அப்போது அந்தப் பக்கமாக வந்தான் ஒரு கிராமவாசி. பிரச்னையைக் கேள்விப்பட்டான். ‘‘ஒரு வேலை பண்ணுங்க, இந்த குன்று அடிவாரத்தில், பெரிய பள்ளங்களை வெட்டுங்க; அதற்குள் பாறைகளை உருட்டித் தள்ளிடுங்க. குன்றும் சமதளமாகும், பள்ளத்தில் தள்ளப்பட்ட பாறைகளும், மாளிகைக்கு உறுதியான அஸ்திவாரமாக அமையும்,” என்றான். செல்வந்தருக்கு மகிழ்ச்சி; பொறியாளர்களுக்கு அதிர்ச்சி!

எப்படி இந்த யோசனை அந்த கிராமவாசிக்குத் தோன்றியது? அவர் மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் பயின்றிருப்பாரா? இருக்கலாம்; அல்லது அதற்குச் சமமான மனதை ஒரு நோக்கில் குவிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பார்!விவேகானந்தர் அமெரிக்கா சென்றிருந்தபோது, சில இளைஞர்கள் ஒரு மைதானத்தில், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததை கவனித்தார். அவர்களருகே போனபோது அவரையும் முயற்சி செய்யச் சொன்னார்கள். விவேகானந்தர் கைத்துப்பாக்கியை வாங்கினார். சுமார் ஐநூறு அடி தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த இலக்கை நோக்கி மிகச் சரியாக குண்டைச் செலுத்தி அதை விழச் செய்தார்.

‘‘அட, இவ்வளவு துல்லியமாக எய்திருக்கிறீர்களே, நீங்கள் எத்தனை வருடங்களாக துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறீர்கள்?” என்று இளைஞர்கள் அவரிடம் ஆர்வத்துடன் கேட்டார்கள். ‘‘இப்போதுதான் முதல் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன்” என்றார் விவேகானந்தர். அவர்கள் பிரமிப்புடன் அவரைப் பார்த்தார்கள்.‘‘கவனம் பிசகாமை, இலக்கு நோக்கிய தீர்மானமான கூர் பார்வை, இலக்கை வீழ்த்திவிட முடியும் என்ற நம்பிக்கை, இவற்றுக்கு ஆதாரமாக நான் மேற்கொண்ட மூச்சுப் பயிற்சி இவைதான் காரணம்,” என்று திடமான குரலில் பதிலளித்தார் விவேகானந்தர்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

Tags : Thirumool ,
× RELATED மஹாதன யோகம்!