- அருள்மிகு வலுபுரம்மன் கோயில்
- அருள்மிகு வலப்பூரம்மன் கோயில்
- சம்லையகோண்டம்பளையம்
- அலகுமலை, வனவஞ்சேரி
- திருப்பூர் மாவட்டம்
- கொங்கு
- செப்பேடிஸ்
- பத்ரகலியம்மன் கோயில்
திருப்பூர் மாவட்டத்தில், கொங்கு நாட்டுப் பகுதியில் வானவஞ்சேரி, அலகுமலை அருகில், சேமலைக்கவுண்டம்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு வலுப்பூரம்மன் கோயில். இது மிகப் பழமையான சக்தி தலமாகப் போற்றப்படுகிறது.இந்தக் கோயில் முன்னர் பத்ரகாளியம்மன் கோயில் என அழைக்கப்பட்டதாகச் செப்பேடுகள் கூறுகின்றன. பின்னர், சோழ மன்னரான விக்கிரமாதித்த சோழன் காலத்தில், இத்தலம் ‘வலுப்பூரம்மன்’ எனப் பெயர் பெற்றதாக வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன.மன்னரின் மகளுக்கு வலிப்பு நோய் பிரச்னை இருந்தது. அந்த நோய் இத்தலத்தில் உள்ள தேவியை வழிபட்ட பிறகு குணமானதாக புராணங்களில் கூறப்படுகிறது. அன்று முதல் வலிப்பு நோய் நிவாரணம் அளிக்கும் தலமாகவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இத்தலம் முழுதும் கல் வேலைப்பாடுகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கருவறை, முன்மண்டபம், மகா மண்டபம் என மூன்று நிலை அமைப்பு தூண்கள் மற்றும் மேற்கூரை தாங்கும் பகுதிகளில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.
மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் முன் மண்டபத்துடன் இந்தக் கோயில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் வலுப்பூரம்மனும், அர்த்த மண்டபத்தில் உற்சவமூர்த்தியும், மகா மண்டபத்தில் வடக்கு முகமாக கன்னிமாரும், விநாயகரும், நாகரும் கிழக்கு முகமாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். கொங்கு நாட்டின் உள்ளூர் கலை அடையாளங்களையும் இணைத்துக் காட்டும் முக்கியமான ஆலயமாகும். இங்கு காணப்படும் கலை வடிவங்கள், அரச ஆதரவுப் பெற்ற சோழர் கலைக்கும், மக்களிடையே நிலவிய கிராமிய சக்தி வழிபாட்டு மரபுக்கும் இடையிலான பாலமாக விளங்குகின்றன.சோழர் காலத்தில் அம்மன் கோயில்கள், பெரிய ராஜகோபுரங்களை விட கருவறை மண்டப அமைப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டன. வலுப்பூரம்மன் கோயிலும் அதற்கேற்றவாறு அமைதியான, வலிமையான கலை வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
அம்மன் சுயம்பு வடிவில் காட்சியளிக்கிறார். முக அமைப்பில் உக்கிரமும் கருணையும் ஒருங்கே வெளிப்படுகின்றன. கண்கள், நெற்றி, மூக்கு அமைப்புகள் சோழர் கால எளிமையான அதே சமயம் உயிரோட்டமுள்ள சிற்ப பாணியை பிரதிபலிக்கின்றன. கருவறை மற்றும் மண்டபத் தூண்களில் காவல் தெய்வங்கள், பெண் சக்தியை குறிக்கும் வடிவங்கள், கிராமிய தெய்வச் சின்னங்கள் அனைத்தும் கொங்கு நாட்டின் நாட்டுப்புறச் சிற்ப மரபை வெளிப்படுத்துகின்றனசோழர் காலத்தில், குறிப்பாக 1112ம் நூற்றாண்டில், அம்மன் கோயில்களுக்கு மிகப்பெரிய ராஜகோபுரங்கள் இருக்காது. குறைந்த உயரம் கொண்ட நுழைவாயில் கோபுரம் அல்லது வாசல் அமைப்பு மட்டுமே இருந்தது. வலுப்பூரம்மன் கோயிலும் அதே மரபைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. எளிய அடுக்கமைப்பு, குறைந்த அளவிலான வடிவங்கள், சக்தி தெய்வங்களின் அடையாளங்கள் கொண்டுள்ளது. இது, கிராமிய சக்தி கோயில்களில் காணப்படும் கோபுரக் கலை மரபின் பிரதிபலிப்பாகும்.
திலகவதி
