×

தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது: துவரங்குறிச்சி மோரணி மலையில் பூத்து குலுங்கும் கடம்ப பூக்கள்

துவரங்குறிச்சி, ஏப்.17: தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட கடம்ப பூ தற்போது துவரங்குறிச்சி மோரணி மலை முருகன் கோவில் வளாகத்தில் பூத்து குலுங்குகின்றன. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மோரணி மலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட ஒரு மாறா பசுமையான வெப்ப மண்டலத்தை சேர்ந்த பூ பூத்துள்ளது. இது அடர்த்தியான கோள வடிவு கொத்துக்களான நறுமணமுள்ள, செம்மஞ்சள் நிற பூக்களை கொண்டுள்ளது. இவ்வகை பூக்கள் வாசனை திரவியங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மரம் ஒரு அலங்கார செடியாகவும், கட்டிடத் தேவைகளுக்காகவும் காகிதம் தயாரிப்பதற்காகவும் வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் இது புராணங்களில் கடம்பு மரம் முருகனுக்கும், திருமாலுக்கும் உரியது என சங்க பாடல்கள் தெரிவிக்கின்றன. கொத்தாக உருண்டு பூக்கும் இதன் மலரின் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. நன்னன் என்னும் அரசனின் காவல் மரம் (கடம்பு) என்று கூறப்படுகிறது. நீரோட்டம் உள்ள கரைகளில் இவ்வகை மரங்கள் செழித்து வளரும். இதன் இலைகளை மாலையாக கட்டி முருகனுக்கு அணிவித்து வந்ததாகவும், இந்த மரத்தின் இலைகளை கம்பளிப்பூச்சி, பட்டாம்பூச்சி மற்றும் வரியன் பூச்சிகள் உணவாக உட்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.முற்காலத்தில் மதுரை கடம்ப மரங்களின் சோலையாக இருந்ததாகவும், இதன் காரணமாகவே மதுரைக்கு கடம்பவனம் என்ற பெயரும் உண்டு என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடம்ப மரம் மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சமாகும்.

மீனாட்சி அம்மனுக்கு கடம்பவன வாசினி மற்றும் கடம்பவனப் பூவை என்றும் திருப்பெயர்களும் உள்ளதாம். பல நூறு ஆண்டுகளாக மீனாட்சி அம்மன் கோயிலில் பழமை வாய்ந்த கடம்ப மரம் வெள்ளி தகடு பதிக்கப்பட்டு பக்தர்களின் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வகை பூ தற்பொழுது துவரங்குறிச்சி பகுதியில் பூத்து குலுங்குவது ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகும்.

The post தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது: துவரங்குறிச்சி மோரணி மலையில் பூத்து குலுங்கும் கடம்ப பூக்கள் appeared first on Dinakaran.

Tags : Southeast Asia ,Morani Hill, Dwarangurichi ,Dwarangurichi ,South Asia ,Morani Hill Murugan Temple ,Arulmigu Subramania Swamy Temple ,Morani Hill, Dwarangurichi, ,Trichy district… ,Morani Hill ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...