திருச்சி, ஜன. 9: பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நேற்று துவங்கியது. திருச்சி ஆழ்வார்தோப்பு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் நேரு, பீமநகர் யானை கட்டி மைதானத்தில் உள்ள ரேஷன் கடை, பெரியமிளகுபாறை மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ரேஷன் கடை, எடமலைப்பட்டிபுதூர், எம்ஜிஆர் நகர், கிராப்பட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் மேயர் அன்பழகன், கலெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள 1302 ரேஷன் கடைகள் மூலம் 8லட்சத்து 36ஆயிரத்து 824 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
