திருச்சி, ஜன.12: திருச்சி என்எஸ்பி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்திருந்த தரைக்கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் துணையுடன் நேற்று அகற்றினர். அந்த வகையில் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 124 தரக்கடைகள் அகற்றப்பட்டது.
திருச்சி மாநகராட்சி மண்டலம்-1 கோட்டத்திற்கு உட்பட்ட என்எஸ்பி ரோடு பகுதிகளில் மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதி முதல் தெப்பக்குளம் வரை சென்னை ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவுப்படியும், 10.12.2025 அன்று, திருச்சி மாநகராட்சி நகர விற்பனை குழு கலந்தலோசனை கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும் மாற்று இடங்களாக சிங்காரத்தோப்பு பகுதியில், பூம்புகார் முதல் தமிழ்ச்சங்கம் பில்டிங் வரை மற்றும் மாவட்ட மத்திய நூலகம் பின்புறம் மதுரை ரோடு மற்றும் லலிதா ஜுவல்லரி, சத்திரம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
