×

சூடுபிடிக்கும் நேஷனல் ஹெரால்டு வழக்கு; சோனியா, ராகுல் காந்தி மீது ஈடி குற்றப்பத்திரிகை தாக்கல்: வரும் 25ல் அடுத்தகட்ட விசாரணை


புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 25ம் தேதிக்கு சிறப்பு நீதிபதி ஒத்திவைத்திப்பதால் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. சுதந்திர போராட்டத்தில் வெற்றியை எதிர்நோக்கி, முன்னாள் பிரதமர் நேருவின் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கடந்த 1938ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 5,000க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். நிதி பற்றாக்குறை காரணமாக இப்பத்திரிகை கடந்த 2008ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ரூ.90 கோடி கடன் பாக்கி தர வேண்டியிருந்தது. அந்த சூழலில், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் ரூ.50 லட்சம் செலுத்தி அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை கையகப்படுத்தியது.

யங் இந்தியா நிறுவனத்தில் சோனியா, ராகுல் காந்தி மட்டுமே தலா 38 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். எனவே, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துக்களை கைப்பற்ற மோசடி நடந்திருப்பதாக பாஜவின் சுப்பிரமணிய சாமி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் கடந்த 2014ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும், சிபிஐயும் 2021ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அமலாக்கத்துறை சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்களிடம் நேரில் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அசோசியேட்டட் ஜர்னல் சுக்கு சொந்தமான ரூ.661 கோடி அசையா சொத்துக்களையும், ரூ.90 கோடி பங்குகளையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த விவகாரத்தில் ரூ.988 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.

இதைத் தொடர்ந்து, மும்பை, டெல்லி, லக்னோவில் உள்ள ரூ.661 கோடி அசையாச் சொத்துக்களை கையகப்படுத்தும் வகையில், அங்குள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை காலி செய்ய அமலாக்கத்துறை கடந்த 11ம் தேதி நோட்டீஸ் ஒட்டியது. இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கும் விஷயம் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் டெல்லி ரூஸ் அவென்யு மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பாக கடந்த 9ம் தேதி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், சோனியா, ராகுல் காந்தியை தவிர, காங்கிரஸ் வெளிநாட்டுப் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா, சுமன் துபே, யங் இந்தியா, டோடெக்ஸ் மெர்சன்டைஸ் பிரைவேட் லிமிடெட், சுனில் பண்டாரி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த குற்றப்பத்திரிகையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு பிரிவு 3 (பண மோசடி) மற்றும் பிரிவு 4 (தண்டனைக்குரிய பணமோசடி) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, மாவட்ட நீதிபதி முன்பாக வேறொரு நீதிமன்றத்தில் உள்ள பிரதான வழக்கு விசாரணையும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமெனவும் அமலாக்கத்துறை வலியுறுத்தி உள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட நீதிபதி விஷால் கோக்னே, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். அன்றைய தினம் வழக்கின் அனைத்து விசாரணை ஆவணங்களையும் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், சோனியா, ராகுலுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதன் மூலம் நேஷனல் ஹெரால்டு வழக்கு சூடுபிடித்துள்ளது.

பழிவாங்கும் அரசியல்: காங். கண்டனம்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் சிலர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் பழிவாங்கும் அரசியல், மிரட்டலே தவிர வேறொன்றுமில்லை. நேஷனல் ஹெரால்டின் சொத்துக்களைக் கைப்பற்றுவது சட்டத்தின் ஆட்சியாக மாறுவேடமிட்டு அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட குற்றம். காங்கிரசும் அதன் தலைமையும் அமைதியாக இருக்காது. உண்மை வெல்லும்’’ என கூறி உள்ளார்.

பாஜ பதிலடி
பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா அளித்த பேட்டியில், ‘‘ஊழல் செய்தவர்கள், பொதுச் சொத்தை கொள்ளையடித்தவர்கள் இப்போது பணத்தை திருப்பித் தர வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் ஏதோ பாதிக்கப்பட்டவர்கள் போல் தங்கள் வழக்கமான நாடகத்தை நடத்துகிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்படியென்றால் நீதிமன்றம் பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதாக அர்த்தமாகுமா?’’ என காங்கிரசை விமர்சித்தார்.

The post சூடுபிடிக்கும் நேஷனல் ஹெரால்டு வழக்கு; சோனியா, ராகுல் காந்தி மீது ஈடி குற்றப்பத்திரிகை தாக்கல்: வரும் 25ல் அடுத்தகட்ட விசாரணை appeared first on Dinakaran.

Tags : National Herald ,ED ,Sonia ,Rahul Gandhi ,New Delhi ,The Enforcement Directorate ,Congress ,Sonia Gandhi ,Dinakaran ,
× RELATED திருவனந்தபுரத்தில் சத்யாகிரக...