சென்னை: அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் இன்று குவாண்டம் தினம் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) தலைவர் சீதாராம் அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: உலக அளவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி சர்வதேச குவாண்டம் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நம்நாட்டில் குவாண்டம் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, அதுகுறித்த ஆய்வுகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ‘தேசிய குவாண்டம் மிஷன்’ (என்க்யூஎம்) எனும் திட்டத்தை ஒன்றிய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குவாண்டம் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரைவுபடுத்துவது, சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பது, குவாண்டம் தொழில்நுட்பத்தில் இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றுவது போன்ற பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில் குவாண்டம் தினத்தை முன்னிட்டு அந்த தொழில்நுட்பத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்த ஆர்வத்தை ஊக்குவிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இன்று (ஏப்ரல் 14) சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதாவது, நிபுணர்கள் சிறப்புரை, குழு விவாதங்கள், பயிற்சிப் பட்டறைகள் உட்பட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு நடத்தப்பட்ட உலக குவாண்டம் தின செயல்பாடுகள் குறித்து விவரங்களை ஏஐசிடிஇ தளத்தில் ஏப்ரல் 21ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குவாண்டம் தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்: உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
