×

தமிழக அரசு – ஐ.நா. அமைப்பு இடையே காலநிலை மீள்திறன் திட்ட செயலாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக உணவு திட்டம், இந்தியாவுடன் மீள்திறனுக்கான தகவமைப்பு எனப்படும் திட்டத்தின் செயலாக்கத்திற்கான புரிந்துணர்வு கடிதம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு கடிதம் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு மற்றும் துணை இயக்குநர், உலக உணவு திட்டம் துணை இயக்குநர் நொசோமி ஹாஷிமோட்டோ ஆகியோர் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இத்திட்டம், தமிழ்நாடு, ஒடிஷா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் பெரிதும் பாதிப்படையக் கூடிய நிலையில் உள்ள, வேளாண் சமூகங்களிடையே, மீள்திறனை வலுப்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் உலக உணவு திட்டம் ஆகியவற்றின் ஒருங்கிணைவுடன் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆகஸ்ட் 2024ல் இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் உலக உணவு திட்டத்திற்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த புரிந்துணர்வு கடித பரிமாற்றமானது காலநிலைத் தகவமைப்பிற்கான தேசிய இலக்குகள் மாநில அளவில் செயல்படுத்தப்படுவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பாக திகழும்.

இந்நிகழ்வின்போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் இயக்குநர் ராகுல் நாத், அரசு சிறப்பு செயலாளர் (சுற்றுச்சூழல்), அனுராக் மிஷ்ரா, அரசு சிறப்பு செயலாளர் (வனம்) ரிட்டோ சிரியாக் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post தமிழக அரசு – ஐ.நா. அமைப்பு இடையே காலநிலை மீள்திறன் திட்ட செயலாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,UN ,Chennai ,United Nations World Food Programme ,India ,Environment ,Climate Change and Forests ,Government of Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...