×

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ரூ.522 கோடி பேரிடர் நிதி ஒதுக்கீடு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கடந்த 2024ம் ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு, புயல், மேகவெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பீகார், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ரூ.1,280.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு எப்போதும் ஆதரவாக நிற்கிறது.

கடந்த ஆண்டு இயற்கை பேரிடர்களை சந்தித்த பீகார், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.1,280.35 கோடியை கூடுதல் நிதியாக வழங்க முடிவு செய்துள்ளது. இதில், பீகாருக்கு ரூ.588.73 கோடியும், இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.136.22 கோடியும், தமிழ்நாட்டிற்கு ரூ.522.34 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2024-25ம் நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 19 மாநிலங்களுக்கு ரூ.4984.25 கோடியும், தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 8 மாநிலங்களுக்கு ரூ.719.72 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பேரிடர்களுக்குப் பிறகும், மாநிலங்களில் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டு அதன் அறிக்கை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ரூ.522 கோடி பேரிடர் நிதி ஒதுக்கீடு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union government ,New Delhi ,Union Home Minister ,Amit Shah ,Bihar ,Himachal Pradesh ,Puducherry ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தல்: காங். சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்