×

சென்னை- மும்பை ஐபிஎல் போட்டிக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 11 பேர் கைது: 25 டிக்கெட், ரூ.40,500 பறிமுதல்

சென்னை: சென்னை- மும்பை அணிகளுக்கு இடையே சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியின் போது மைதானம் அருகே கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 டிக்கெட்டுகள், ரூ.40,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் சிலர் ஆன்லைனில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கி, போட்டி நடந்த மைதானம் அருகே கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நேற்று முன்தினம் மாலை போட்டி நடந்த மைதானம் அருகே, வாலாஜா சாலை, சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம், பட்டாபிராம் கேட், பெல்ஸ் சாலை, விக்டோரியா ஹாஸ்டல் சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது டிக்கெட் கிடைக்காத ரசிகர்களுக்கு சிலர் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக தனித்தனியாக 4 வழக்குகள் பதிவு செய்து, கோடம்பாக்கத்தை சேர்நத் மணிகண்டன் (29), ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (25), தேனியை சேர்ந்த பாரதி கண்ணன் (26), கடலூரை சேர்ந்த விஜயகோகுல் (20), ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த உதய்கிரண் (22), ராயப்பேட்டையை சேர்ந்த விமல்குமார் (26), சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த வாசு (28), பவண் (35), தெலங்கானாவை சேர்ந்த சந்திரசேகர் (27) ஆகிய 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அதேபோல் எழும்பூர் காவல் எல்லையில் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற அயனாவரத்தை சேர்ந்த மோகன் மோத்வானி (33), மயிலாப்பூரை சேர்ந்த நிரஞ்சன் (29) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து ேபாலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 11 பேரிடம் இருந்து ரூ.40,500 பணம் மற்றும் விற்பனை செய்யப்படாத 25 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 11 பேரையும் போலீசார் கடுமையாக எச்சரித்து நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர்.

The post சென்னை- மும்பை ஐபிஎல் போட்டிக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 11 பேர் கைது: 25 டிக்கெட், ரூ.40,500 பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mumbai IPL tournament ,IPL ,Mumbai ,Chennai Sepakkam ,Chennai- Mumbai IPL tournament ,Dinakaran ,
× RELATED மண் கடத்தல்; தொழிலாளி பலி தவெக நிர்வாகி அதிரடி கைது