திருக்கழுக்குன்றம்: புதுச்சேரியில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று காலை வந்துக்கொண்டிருந்தது. பழுதடைந்த இந்த பேருந்தை பராமரிப்பு பணிக்காக கோயம்பேடு பணிமனைக்கு ஓட்டுநர் தியாகராஜன் ஓட்டி வந்தார். அவருடன், நடத்துநர் மனோகரனும் வந்துள்ளார்.கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே வந்தபோது, பேருந்தின் முன் பக்கத்தில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் தியாகராஜன், பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார். பின்னர், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் 2 பேரும் கீழே இறங்கினர்.
கரும் புகையுடன் இஞ்சினில் இருந்து தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் பற்றி எரிய துவங்கியது. இதுகுறித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்பாக்கம் அணுமின் நிலைய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் செய்யூர் தீயணைப்பு துறையினர், அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பேருந்து தீ விபத்துக்குள்ளான காரணம் குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post பராமரிப்பு பணிக்காக வந்து கொண்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து: கூவத்தூர் அருகே இசிஆர் சாலையில் பரபரப்பு appeared first on Dinakaran.
