பெங்களூரு: தங்கம் கடத்திய வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருக்கும் நடிகை ரன்யா ராவ், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெங்களூரு பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது. கன்னட நடிகை ரன்யா ராவ், துபாயிலிருந்து பெங்களூருவிற்கு தங்கம் கடத்தி வந்து வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டார். துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்தை தொடையில் ஒட்டி கடத்திவந்த ரன்யா ராவை வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் மார்ச் 3ம் தேதி கைது செய்தனர்.
நீதிமன்றக் காவலில் உள்ள ரன்யா ராவை, இடையில் 3 நாட்கள் காவலில் எடுத்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரித்தனர். நீதிமன்றக் காவலில் உள்ள ரன்யா ராவ் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு, பொருளாதாரக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மார்ச் 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க டிஆர்ஐ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அப்போது, ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க மறுத்து, அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
The post தங்கம் கடத்திய வழக்கில் நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.
