×

மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகள் 15ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறப்பார். நாளை வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். நாளை மறுநாள் (15ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கும்.

15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடைபெறும். 19ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இதற்கிடையே நாளை முதல் பக்தர்கள் 18ம் படி ஏறியவுடன் ஐயப்பனை தரிசிக்கும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதுவரை பக்தர்கள் 18ம் படி ஏறிய பின்னர் இடதுபுறம் சென்று நடை மேம்பாலத்தில் ஏறி கோயிலை சுற்றி வந்து ஐயப்பனை தரிசிக்கும் நிலை இருந்தது.

இதன் மூலம் ஒரு சில வினாடிகள் மட்டுமே ஐயப்பனை தரிசிக்க முடிந்தது. நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ள இந்த புதிய வசதி மூலம் பக்தர்கள் குறைந்தது 20 வினாடிகள் தரிசனம் செய்ய முடியும். பக்தர்கள் 18ம் படி ஏறியவுடன் கொடிமரத்தின் இடது மற்றும் வலதுபுறம் வழியாக இரு வரிசைகளில் செல்ல வேண்டும். வரிசையில் நிற்கும் போதே ஐயப்பனை தரிசிக்க முடியும்.

The post மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimala Ayyappa ,Temple ,Masi month ,Thiruvananthapuram ,Masi ,Sabarimala Ayyappa Temple ,Melshanthi Arunkumar Namboothiri ,Thanthri Kandara Rajeeva ,
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்