பெரம்பூர்: சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் அரக்கோணம் மார்க்கமாக மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில், கொரட்டூர் ரயில் நிலையம் வந்தபோது, வாலிபர்கள் சிலர், மின்சார ரயிலில் பயணித்த மாநில கல்லூரி மாணவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். இதனால், அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த சம்பவத்தை பலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். இதனை பார்த்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பெரம்பூர் இருப்பு பாதை இன்ஸ்பெக்டர் பத்மநாபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்து சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் ரயில் நிலையத்தில் பயணிகள் எடுத்த வீடியோக்களின் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அதில், தாக்குதலில் ஈடுபட்டது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிந்தது. இதுதொடர்பாக, திருவள்ளூர் ஒன்றிக்குப்பம் பகுதியை சேர்ந்த பாலா (எ) பரந்தாமன் (19), திருவள்ளூர் பகுதியை சேர்ந்த உமாபதி (19), ஆவடி கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (21), திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (19), அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 4 பேர் உள்பட 9 பேரை நேற்று கைது செய்தனர்.
இவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் பெரம்பூர் இருப்புப் பாதை ரயில் நிலையத்திற்கு வந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாவண்யா என்ற பெண் ஐடியில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் தான் கெத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வேஸ்ட் என்ற ரீதியில் பதிவு செய்து இருந்ததாகவும், இதனை கண்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என நினைத்து தாக்குதலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் குறிப்பிட்ட லாவண்யா என்ற பெயர் கொண்ட அந்த ஐடி போலியானது என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த பெரம்பூர் இருப்புப் பாதை ரயில்வே போலீசார், சிறுவர்களை சீர்திருத்த பள்ளிக்கும் மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையிலும் அடைத்தனர். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
* ஒழுங்கு நடவடிக்கை
பொது இடங்களில் மாணவர்கள் அடிக்கடி மோதிக்கொள்வதை தடுக்கும் வகையில், ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று பச்சையப்பன் கல்லூரிக்கு சென்று வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வகுப்புகளை புறக்கணித்து அந்த மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரிக்கு பரிந்துரை செய்ய உள்ளதாகவும் எஸ்பி ஈஸ்வரன் தெரிவித்தார்.
The post ரயில் மீது கற்களை வீசி தாக்கிய 9 கல்லூரி மாணவர்கள் கைது appeared first on Dinakaran.
