சென்னை: ஒரு காலத்தில் மக்கள் எல்லாம் வீடுகளுக்கு பக்கத்தில் இருந்த மளிகை கடைகளில் தான் பொருட்கள் வாங்குவார்கள். அதன் பின்னர் மெல்ல மெல்ல பெரிய கடைகளுக்கு சென்று மொத்தமாக பொருட்களை வாங்க தொடங்கினார்கள். காலப்போக்கில் பெரிய அளவிலான சூப்பர் மார்க்கெட்டுகள், ஆன்லைனில் பொருட்கள் வாங்க தொடங்கி விட்டதால் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மளிகை கடைகள் எல்லாம் வேகமாக அழிந்து வருகிறது.
சாப்பாடு வாங்குவதில் தொடங்கிய ஆன்லைன் மயம், இப்போது வீட்டிற்கு தேவையான அத்தனை மளிகை பொருட்களையும் ஆன்லைனில் வாங்குவது அதிகரித்துவிட்டது. காய்கறிகளையும் ஆன்லைனில் வாங்குவதையே மக்கள் விரும்புவது அதிகரித்துவிட்டது. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களில் கூட நிலைமை வேகமாக மாறி வருகிறது.
ஏனெனில் சலுகை, தள்ளுபடி விலையில் கிடைப்பதால் ஆன்லைனில் பொருட்கள் வாங்க மக்களிடம் வரவேற்பு அதிகமாக உள்ளது. ஒரு காலத்தில் சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் சிறிய மளிகை கடைகள் இருக்கும். அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு அது மிகவும் உபயோகமானதாக இருந்து வந்தது. ஆனால் ஆன்லைன் வர்த்தகம், தொழில் வரி, கடை வாடகை அதிகம் போன்ற பல்வேறு காரணங்களால் சிறிய மளிகை கடைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
இப்போது எல்லாம் பால் வாங்க வேண்டும் என்றாலும் ஒரு கிலோ மீட்டர் பயணிக்க வேண்டிய தெருவெல்லாம் இருக்கிறது. பெரிய சாலைகள், பிரதான சாலைகளில் தான் கடைகள் அதிகமாக உள்ளது, சிறிய தெருக்களில் உருவாகும் கடைகள் வெகு சீக்கிரமாகவே மூடப்படுகின்றன. அந்த வகையில் பல்வேறு காரணங்களால் சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீத மளிகை கடைகள் மூடப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சியின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. அதாவது சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 169 சிறிய மளிகை கடைகள் மூடப்பட்டு விட்டதாக மாநகராட்சி புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
ஒரு காலத்தில் சென்னையில் 500 சதுர அடிக்கும் குறைவான இடங்களில் 10 ஆயிரத்து 645 உரிமம் பெற்ற சிறிய மளிகை கடைகள் இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 169 கடைகள் மூடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது 8 ஆயிரத்து 476 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. மண்டல வாரியாக பார்க்கும் போது, ராயபுரம் மண்டலத்தில் 1,342 கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் 286 கடைகள் இப்போது செயல்பாட்டில் இல்லை. தி.நகர், கோடம்பாக்கம் மண்டலத்தில் 645 மளிகை கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் 199 கடைகள் இப்போது மூடப்பட்டுள்ளன. இப்படி சென்னையில் 5 ஆண்டுகளில் ஒப்பிடும்போது 20 சதவீதம் சிறிய மளிகை கடைகள் மூடப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னையில் ஒரு காலத்தில் 577 பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் இயங்கி வந்தது. இதில், 189 சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டு விட்டதாகவும், தற்போது 388 சூப்பர் மார்க்கெட்டுகள் மட்டுமே இயங்கி வருவதாகவும் மாநகராட்சி கூறியுள்ளது. அன்றாடம் 1000, 1500 கிடைத்தால் போதும் என்று நடத்துபவர்களே ஓரளவு கடையை நடத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். சம்பளத்திற்கு ஆள் போட்டு எல்லாம் நடத்தக்கூடிய அளவிற்கு மளிகை வியாபாரத்தில் லாபம் இல்லை என்றும் கவலை தெரிவிக்கிறார்கள்.
The post ஆன்லைன் வர்த்தகம், சூப்பர் மார்க்கெட் வருகையால் சென்னையில் சிறிய அளவிலான 2,169 மளிகை கடைகள் மூடல் appeared first on Dinakaran.
