×

40 ஆண்டுகளுக்கு பிறகு கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

சென்னை: குன்றத்தூர் அடுத்த கோவூரில் பிரசித்தி பெற்றதும், சுமார் 1300 ஆண்டுகள் பழமையானதும், வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான சுந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. நவக்கிரக கோயில்களில் ‘புதன்’ பரிகார தலமாக இக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தின் முன்பும், அந்த பகுதியைச் சுற்றிலும் தினமும் ஏராளமான படப்பிடிப்புகள் நடைபெறுவது வழக்கம். இதனால், இக்கோயில் வளாகம் மினி கோடம்பாக்கம் போலவே காணப்பட்டது.

இந்த நிலையில், இந்த கோயிலின் தேர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்படாமல் அப்படியே முடங்கி இருந்தது. அதனை சீரமைத்துத் தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட நாட்களாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய தேர் செய்யும் பணிகள் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. பின்னர், அந்தப் பணிகள் முடிவடநை்தது.

இந்நிலையில், நேற்று காலை புதிய தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக தேரோட்டத்தை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, சுந்தரேஸ்வரர் மற்றும் சவுந்தராம்பிகை அம்மனுக்கு புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விஷேச பூசைகள் நடைபெற்றன. பின்னர், தேரின் மீது கலசங்கள் பொருத்தி, கலசத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து வெள்ளோட்டம் தொடங்கியது.

இதில், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, தேரை கொடியசைத்து, வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். கோவூர், குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி, போரூர் ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கோயிலின் முக்கிய மாடவீதிகள் வழியாக தேர் ஊர்வலமாக சென்றது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக தேர் செய்யப்பட்டு, வெள்ளோட்டம் நடத்தப்பட்டதால் பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பக்திப் பரவசமடைந்தனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தேர் திருப்பணிக் குழுவினர் மற்றும் கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் ப.சுதாகர் ஆகியோர் மேற்கொண்டனர். இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வந்தேமாதரம், இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் கார்த்திகேயன், செயல் அலுவலர் சீனிவாசன், பரம்பரை அரங்காவலர் ஆனந்த பத்மநாபன், ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன் ஒன்றிய கவுன்சிலர் லோகநாயகி சாமிநாதன், உஷா நந்தினி எத்திராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெமிலா பாண்டுரங்கன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திருப்பணிக் குழு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் கோயில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கவும் மாங்காடு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

The post 40 ஆண்டுகளுக்கு பிறகு கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Govur Sundareswarar Temple ,Minister Tha. Mo. Annabarasan ,Chennai ,Sundarambika Sameda Sundareswarar Temple ,Kunrathur ,Ikoil ,Merudan ,Navakraga ,Minister Tha. Mo. Anbarasan ,
× RELATED பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக...