வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் டேனி வளனரசு(19). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் ஆரணியை சேர்ந்த கிஷோர் கண்ணன்(19), பாண்டிச்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி(19), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இன்பவர்மா(18). அனைவரும் வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரியில் படித்துள்ளனர். இந்நிலையில் கல்லூரிக்கு செமஸ்டர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் 4 பேரும் சொந்த ஊருக்கு சென்றனர். பின்னர் டேனி வளனரசு மட்டும் கடந்த 31ம் தேதி இரவு வேலூருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், டேனி வளனரசுவின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் அவரது பெற்றோர், நண்பர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த டேனி வளனரசுவின் பெற்றோர் பாகாயம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கிஷோர் கண்ணனிடம் விசாரணை நடத்தியதில் டேனி வளனரசு அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
டேனி வளனரசுவுக்கும், நண்பர்களான கிஷோர்கண்ணன், பார்த்தசாரதி ஆகியோருக்கும் இடையே கல்லூரியில் படிக்கும் பெண்ணை காதலிப்பது தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக டேனி வளனரசுவை கொலை செய்ய நண்பர்கள் 2 பேரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த 1ம் தேதி போதையில் இருந்த டேனி வளனரசுவை நண்பர்கள் இருவரும் இரும்பு கம்பியால் தாக்கி, கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர், சந்தேகம் வராத வகையில், போதையில் மட்டையாகி இருப்பது போல் செய்து, சாய்நாதபுரத்தில் இருந்து 12 கி.மீ தூரத்திற்கு சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்று, தமிழ்நாடு- ஆந்திர எல்லையான சித்தபாறை மலையடிவாரத்தில் வீசிவிட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
* மர்ம நபர்கள் 4 பேர் அடித்துக் கொன்றதாக நாடகம்
கிஷோர் கண்ணனிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ‘கடந்த 1ம் தேதி இரவு சாய்நாதபுரத்தில் உள்ள வாடகை வீட்டிற்கு, தானும் பார்த்தசாரதியும் வந்து பார்த்தபோது, டேனி வளனரசு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும், அவர், ‘என்னை 4 பேர் அடித்துவிட்டனர், நான் உயிர் பிழைக்க மாட்டேன். இத்தகவலை வீட்டிற்கு சொல்ல வேண்டாம்’ என கூறியதாகவும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டதாகவும் இருவரும், உடலை பைக்கில் எடுத்து கொண்டு தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள மலையடிவாரத்தில் வீசிவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் தான் கொலை செய்ததை கிஷோர் கண்ணன் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
