வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் அலங்கார அம்மாள் (85). மூதாட்டி. இவரது கணவர், கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். இவர்களின் ஒரு மகன், 4 மகள்களில் ஒரு மகள் உள்ளூரிலும், மீதமுள்ள 3 மகள்களுக்கு திருமணமாகி, வெளியூர்களில் தங்களின் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் மூதாட்டி அலங்கார அம்மாள் மட்டும் தனியே வசித்து வந்துள்ளார். தனது தாயாரை உள்ளூரில் வசிக்கும் மகள் மட்டும் அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி காலை அலங்கார அம்மாள் வழக்கம் போல் அன்றாட பணிகளை செய்வதற்கு வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. இதில் சந்தேகமான அக்கம்பக்கத்தினர் மற்றும் உள்ளூரில் வசிக்கும் மகள் ஆகியோர், அலங்கார அம்மாளின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு வீட்டு முன்னறையில் அலங்கார அம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவரது கழுத்து, காது, மூக்கில் இருந்த ஒரு சவரன் நகைகள் காணமல் போயிருந்தன மேலும், வீட்டிலிருந்த பீரோவில் இருந்து அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன. மேலும், வீட்டுவாசலில் இருந்த அம்மிக்கல் வீட்டுக்குள் இருந்தது. இதுதவிர, அலங்கார அம்மாளின் வீட்டின் பல்வேறு இடங்களில் மிளகாய்பொடியும் தூவப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்ததும் வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை ஆய்வு செய்வதற்கு காஞ்சி மாவட்ட எஸ்பி சண்முகம், உத்திரமேரூர் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்து ஆய்வு நடத்தினர். மேலும், மூதாட்டி படுகொலை குறித்து 2 தனிப்படைகள் அமைத்து, மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ராமராஜன் (38) என்பவர், மூதாட்டி அலங்கார அம்மாளை படுகொலை செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை தாம்பரம் ரயில் நிலையத்தில் பதுங்கியிருந்த ராமராஜனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை வாலாஜாபாத் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், வேலையின்றி சுற்றி திரிந்த அவருக்கு திருமணமாகி மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும், அங்கு மூதாட்டி அலங்கார அம்மாள் தனியே வசித்து வருவதையும், அவரிடம் அதிகளவு நகைகள் மற்றும் பணம் இருப்பதையும் ராமராஜன் நோட்டமிட்டு வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 17ம் தேதி அதிகாலை அலங்கார அம்மாளை பணம், நகைக்கு ஆசைப்பட்டு, அவரை அம்மிக்கல்லால் ராமராஜன் சரமாரி தாக்கி கொலை செய்துவிட்டு, அவரது நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்துக்கு ராமராஜனை போலீசார் அழைத்து சென்று, அவர் எவ்வாறு அலங்கார அம்மாளை கொலை செய்தார் என்று நடித்து காட்டி, அவற்றை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ராமராஜனை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
