×

ஆவின் நிறுவன பண மோசடி ஊழல் விவகாரம் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்குக்கு அனுமதி தராதது ஏன்? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி; முதன்மை செயலாளர் பதிலளிக்க சம்மன்

புதுடெல்லி: கடந்த 2016- 2021ல் அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் 33 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்ததாக விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. அனுமதி கிடைக்காததால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை என்று கூறி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிராக கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ‘‘எங்களது கோரிக்கையை கடந்த இரண்டரை ஆண்டுக்கும் மேலாக ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”இந்த விவகாரத்தில் நீங்கள் ஏற்கனவே பெரும்பாலான விசாரணையை முடித்ததாக சொல்கிறீர்கள். அப்படி இருக்கும் போது சிபிஐக்கு இந்த விசாரணையை ஏன் உயர்நீதிமன்றம் மாற்ற வேண்டும். ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கைக்கு அனுமதி கோரி தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆன்.என்.ரவிக்கு அனுப்பிய மனுவின் நிலை என்ன ? அந்த விவகாரத்தில் அவர் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஆளுநரின் முதன்மை செயலாளர் அடுத்த விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து சிறிது நேரம் ஆலோசித்த இரு நீதிபதிகளும், ‘‘ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் இருக்கும் நிலைப்பாடு குறித்து ஆளுநரின் முதன்மை செயலாளர் விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்புகிறது என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

 

The post ஆவின் நிறுவன பண மோசடி ஊழல் விவகாரம் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்குக்கு அனுமதி தராதது ஏன்? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி; முதன்மை செயலாளர் பதிலளிக்க சம்மன் appeared first on Dinakaran.

Tags : Rajendra Balaji ,Aavin ,Supreme Court ,Governor RN Ravi ,Principal Secretary ,New Delhi ,Dairy Minister ,AIADMK government ,Aavin… ,Dinakaran ,
× RELATED பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின்