×

ரோகித் குறித்து காங். நிர்வாகி சர்ச்சை கருத்து: பெட்டி, படுக்கையுடன் நாட்டைவிட்டு போ…! யுவராஜ் சிங் தந்தை காட்டம்

துபாய்: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ரோகித் சர்மா 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதுகுறித்து விமர்சித்திருந்த சமா முகமத் ‘‘ரோகித் சர்மா தனது உடல் எடையை குறைக்க வேண்டும். பார்ப்பதற்கே ஆர்வத்தை தூண்டாத கேப்டனாக விளங்குகிறார். இந்திய அணிக்கு ரோகித் போன்ற ஒரு பருமனான கேப்டனை பார்த்ததில்லை’’ என்று விமர்சித்து இருந்தார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில சமாவின் கருத்திற்கு யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், கடும் கண்டனத்தை காட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எந்த விஷயம் ஒருவருக்கு நன்றாக வருகிறதோ, அதை தான் அவர்கள் செய்ய வேண்டும். அதைப்பற்றி தெரியாத ஒருவர் அந்த வேலையை செய்தால் அது கெட்டுப் போய்விடும்.

இந்த நாடும், இந்த நாட்டு மக்களும், இந்திய கிரிக்கெட் வீரர்களும் என்னுடைய வாழ்க்கையை விட எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நாட்டிற்கு பெருமை சேர்த்த ஒரு வீரர் குறித்து அரசியல் கட்சியில் இருக்கும் ஒரு நபர் எப்படி இவ்வாறு கருத்து தெரிவிக்கலாம். இப்படி பேசியதற்கு உண்மையிலேயே அவர் தான் வெட்கப்பட வேண்டும். இப்படி பேசியதால் இந்த நாட்டில் தங்குவதற்கான தகுதியையும், உரிமையையும் அவர் இழந்துவிட்டார். கிரிக்கெட் தான் என்னை போன்ற ரசிகர்களின் மதம். நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை நாம் இழந்தோம். அப்போது பலரும் பல விஷயத்தை பேசினார்கள். ஆனால் அச்சமயத்தில் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி ஆகியோருக்கு நாங்கள் துணையாக நின்றோம்.

ஆனால் தற்போது இந்த பேச்சு எனக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருக்கின்றது. இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் பாகிஸ்தானில் நடந்துதான் நான் கேள்விபட்டிருக்கிறேன். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரே அவர்களுடைய வீரர்கள் அதிக அளவு வாழைப்பழம் சாப்பிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இந்தியாவில் இது போன்று ஒருவர் பேசியதை கொஞ்சம் கூட நாம் பொறுத்துக்கொள்ளக்கூடாது. சமாமுகமத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் மட்டும் இந்த நாட்டின் பிரதமராக இருந்திருந்தால் சமா முகமதை பார்த்து உன்னுடைய பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறு என்று கூறியிருப்பேன். இவ்வாறு யோக்ராஜ் சிங் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

The post ரோகித் குறித்து காங். நிர்வாகி சர்ச்சை கருத்து: பெட்டி, படுக்கையுடன் நாட்டைவிட்டு போ…! யுவராஜ் சிங் தந்தை காட்டம் appeared first on Dinakaran.

Tags : Rohit ,Yuvraj Singh ,Dubai ,Rohit Sharma ,New Zealand ,Sama Mohammed ,Dinakaran ,
× RELATED 14 சிக்சருடன் 157 ரன் சர்ப்ராஸ் கானின்...