×

கல்வி நம்மை எந்த நேரத்திலும் காப்பாற்றும்

ரிஷிவந்தியம், பிப். 27: ரிஷிவந்தியத்தில் நடந்த மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வி நம்மை எந்த நேரத்திலும் காப்பாற்றும் என நடிகர் சமுத்திரக்கனி பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டின்பேரில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி அரியலூர் அரசு பள்ளியில் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆட்சியர் பிரசாந்த் தலைமை தாங்கினார். வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ வரவேற்றார். முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் ராஜேந்திரன், முன்னாள் காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) கலியமூர்த்தி, பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஊடகவியலாளர் உமா, திருவள்ளுவர் அறக்கட்டளை தலைவர் பெருநற்கிள்ளி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றினர்.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இதில் தேசிய விருது பெற்ற நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி பேசியதாவது: கல்வி நம்மை எந்த நேரத்திலும் காப்பாற்றும். நான் துணை இயக்குனராக இருந்தபோது மிகவும் கஷ்டப்பட்டேன். கையில் காசு இல்லாத நேரத்தில் எனது வீட்டு உரிமையாளரின் மகனுக்கு கணக்கு பாடம் நடத்தினேன். அதன் பின்னர் எனது வீட்டின் உரிமையாளர் என்னிடம் வாடகையே கேட்கவில்லை. படிப்பில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவும் இல்லை. சாட்டை படம் என்னை என்னவோ செய்தது. ஒரு படம் செய்வதற்கு முன்னர் அதில் பல்வேறு ஆய்வுகளை செய்து அந்த படத்தை நாங்கள் இயக்குகிறோம். சாட்டை படம் செய்யும்போது நாங்கள் செய்த ஆய்வில் மாணவர்கள் நான்கு விதமாக மெதுவாக கற்பவர்கள், வேகமாக கற்பவர்கள், மிதமாக கற்பவர்கள், கற்றல் குறைபாடு உள்ளவர்கள் என இருந்தார்கள்.

அதேபோல் ஆசிரியர்கள் இரண்டு விதமாக படித்த வாத்தியார், படிக்கின்ற வாத்தியார் என இருக்கின்றனர். மாணவர்கள் பெண்கள் மீது மரியாதை வைக்க வேண்டும். அவர்களை சக தோழிகளாக, சகோதரிகளாக பாதுகாக்க வேண்டும். செல்போன் அனைவரையும் அந்நியர் ஆக்கிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

The post கல்வி நம்மை எந்த நேரத்திலும் காப்பாற்றும் appeared first on Dinakaran.

Tags : Rishivandhiyam ,Samuthirakani ,Kallakurichi district ,MLA ,Vasantham Karthikeyan ,Rishivandhiyam Assembly Constituency Ariyalur Government… ,
× RELATED ஓட்டலில் மனித கறி கேட்டு தகராறு சமையல் மாஸ்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு