×

அடமானம் வைத்த விற்பனை பத்திரம் மாயம்; வாடிக்கையாளருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் பணியாற்றி வந்த தனசேகரன் அதே வங்கியில் விற்பனை பத்திரத்தை அடமானமாக வைத்து கடன் பெற்றுள்ளார். ஓய்வு பெற இருந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனசேகரன் அந்த கடனை முழுமையாக செலுத்தியுள்ளார். இதனையடுத்து தனது அசல் விற்பனை பத்திரத்தை வழங்கக்கோரி தனசேகரன் வங்கியிடம் முறையிட்டுள்ளார். பத்திரம் தொலைந்ததாக கூறிய நிர்வாகம் நகல் பத்திரம் பெற உதவுவதாக கூறி அவருக்கு இழப்பீடாக ₹50,000 வழங்கியது.

இதனை எதிர்த்து தனசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வீரராகவன், கடன் திரும்ப செலுத்திய பின் பத்திரத்தை வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ₹5,000 வழங்க வேண்டும். வாங்கிய கடனுக்கு ரிசர்வ் வங்கி விதிப்படி வட்டி வசூலிக்கும் வங்கி இந்த விவகாரத்திலும் ரிசர்வ் வங்கி விதிப்படி செயல்பட வேண்டும் என்று வாதிட்டார்.

வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இழப்பீடு குறித்து உயர் நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. அதற்கு சிவில் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் எனக்கூறினார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரிசர்வ் வங்கி விதிகள் தெளிவாக உள்ள நிலையில் இழப்பீடு தொடர்பாக மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை நாட வேண்டியதில்லை. எனவே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மனுதாரருக்கு இழப்பீடாக 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post அடமானம் வைத்த விற்பனை பத்திரம் மாயம்; வாடிக்கையாளருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : HC ,Indian Overseas Bank ,Chennai ,Dhanasekaran ,Kanchipuram district ,Dinakaran ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...