- கலைஞர் நூற்றாண்டு விழா
- குத்துச்சண்டை ஏ
- கோபாலபுரத்தில்
- முதல் அமைச்சர்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம்
- தின மலர்
சென்னை: கோபாலபுரத்தில் ரூ.8 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2022-23ம் நிதி ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மானிய கோரிக்கையில், சென்னை நகரமானது பாரம்பரியமாகவே குத்துச்சண்டை விளையாட்டிற்கு புகழ்பெற்றது. சென்னையில் பல்வேறு குத்துச்சண்டை வீர்ர்கள் உருவாகி குத்துச்சண்டை விளையாட்டில் புகழ்பெற்று விளங்கினர்.
தமிழ்நாட்டில் குத்துச்சண்டை விளையாட்டை மீண்டும் புகழ்பெறச் செய்ய, பல்வேறு உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்களை உருவாக்குவது அவசியமானதாகும். எனவே, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் குத்துச்சண்டை விளையாட்டிற்கு புத்துயிர் அளிக்க குத்துச்சண்டை அகாடமி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்வரால் கடந்த ஆண்டு நவ.2ம் தேதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோபாலபுரத்தில் ரூ.8 கோடியில் குத்துச்சண்டை அகாடமி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதை தொடர்ந்து, 890 பேர் அமரும் வகையிலான பார்வையாளர் மாடத்துடன் கூடிய முற்றிலும் குளிரூட்டப்பட்ட உள்அரங்கம், பயிற்சி மைதானம், உடற்பயிற்சிக் கூடம், பயிற்சியாளர் அறை, பயிற்சி செய்யும் பகுதி, மருத்துவர் அறை, நிர்வாக அலுவலகம் ஆகிய வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு குத்துச் சண்டை அகாடமி கட்டி முடிக்கப்பட்டது. இந்த அகாடமி, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள குத்துச்சண்டை ஆர்வலர்கள் மற்றும விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்துக்கொண்டு பதக்கங்களை வெல்வதற்கு நல்வாய்ப்பாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அங்கு நடந்த பிளை வெயிட் பிரிவில் 48 முதல் 51 கிலோ எடை பிரிவிற்கான குத்துச்சண்டை போட்டியை பார்வையிட்டு, வெற்றி பெற்ற குத்துச்சண்டை வீராங்கனைக்கு கோப்பையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் எழிலன், வெற்றியழகன், தாயகம் கவி, எபிநேசர், அசன் மவுலானா, பரந்தாமன், எம்.கே.மோகன், ஜோசப் சாமுவேல், ஆர்.டி.சேகர், துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post கோபாலபுரத்தில் ரூ.8 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.
