- திருக்கழுகுன்றம் பஜார் ரோடு
- திருக்கழுகுன்றம்
- காங்கிரஸ் எஸ்சி/எஸ்டி
- செங்கல்பட்டு
- ஜனாதிபதி
- சரவணன்
- வருவாய் செயலாளர்
- அமுதா
- தின மலர்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றாமல் உள்ளதால், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி காங்கிரஸ் எஸ்சி/எஸ்டி பிரிவு செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சரவணன், வருவாய்த்துறை செயலாளர் அமுதாவிற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த, மனுவில் கூறியிருப்பதாவது: உலக புகழ்பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்ற திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ள இவ்வூருக்கு தமிழகம் மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிலிருந்தும் ஆன்மீக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகின்ற நிலையில், இங்குள்ள பஜார் வீதியின் இரு புறத்திலும் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், ஆன்மீக சுற்றுலா பயணிகள் முதல் பல்வேறு தரப்பினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தாங்கள் செங்கல்பட்டு சப்-கலெக்டராக இருந்த அப்போதைய கால கட்டத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய உரிய பணிகளை மேற்கொண்டபோது, ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் தரப்பில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்தது.
ஆனாலும் இத்தனை ஆண்டுகளாகியும் இதுவரையில் பொதுமக்களின் நலன் கருதி அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி உள்ள திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, சாலையை அகலப்படுத்தி ஆன்மீக பயணிகள் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை போக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: வருவாய்த்துறை செயலாளருக்கு கோரிக்கை மனு appeared first on Dinakaran.
