வளசரவாக்கம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (19). கடந்த 2019ம் ஆண்டு 13 வயது சிறுமியை, பிரகாஷ் மற்றும் 16 வயது சிறுவன், அந்த பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், பிரகாஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் மீது அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், பிரகாசை மட்டும் கைது செய்தனர்.
மற்றொரு நபரான 16 வயது சிறுவன் மீதான வழக்கு, சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பிரகாஷ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.5,000 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post சிறுமி பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.
