×

வால்பாறையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; யானை, கரடி, செந்நாய் போன்ற விலங்குகள் எஸ்டேட் பகுதிகளில் முகாம்: வன விலங்குகள் தென்பட்டால் தகவல் அளிக்க வனத்துறை வேண்டுகோள்


வால்பாறை: வால்பாறை பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதிகள், மலைப்பகுதிகளில் புற்கள் காய்ந்து காட்சி அளிக்கிறது. ஆறுகளில் நீர் வற்றி வருகிறது. சில ஆறுகள் ஓடைகளாக காட்சியளிக்கிறது. நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து நின்று விட்டது. கான்கிரீவ் அருவி, பிர்லா அருவி, இரைச்சல் பாறை அருவி ஆகியவற்றில் குறைந்த அளவே நீர் வரத்து உள்ளது. சோலையார் அணையும் நீரின்றி மண் திட்டாக காட்சியளிக்கிறது. வன விலங்குகள் அட்டகட்டி, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் மட்டத்திற்கு மேல் 800 மீட்டர் உயரத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் தஞ்சம் அடைய தொடங்கி உள்ளது.

எனவே வால்பாறையை ஒட்டிய எஸ்டேட் பகுதிகளில் செந்நாய்கள், யானைகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் தஞ்சமடைந்து வருகிறது. பொதுவாக அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை வன விலங்குகள் குட்டிகளை ஈன்று, உணவு சாப்பிட பழக்கும் காலமாக உள்ளது. இதனால் குட்டிகளுடன் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் வன விலங்குகள் செந்நாய், காட்டு மாடுகள், சிறுத்தை மற்றும் யானை கூட்டங்கள் ஒன்றை ஒன்று பாதுகாத்துக் கொள்ள சண்டையிட்டு கொள்கிறது. சமீபத்தில் மானாம்பள்ளியில் யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு பெண் யானை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடுமலை, பச்சமலை எஸ்டேட் பகுதியில் செந்நாய்கள், வில்லோனி எஸ்டேட், இஞ்சிப்பாறை மற்றும் செங்குத்து பாறை, குரங்குமுடி எஸ்டேட் பகுதிகளில் கரடிகளும் யானைகளும் முகாமிட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள் தென்பட்டால் வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வனங்கள் காய்ந்துள்ள நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக உயர் அதிகாரிகள் எளிதில் தீ பிடிக்கும் பொருட்களுடன் வனத்திற்குள் செல்லவும், சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் சமைக்கவும், புகை பிடிக்கவும் தடை விதித்து உள்ளனர். மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். வனத்திற்குள் தீ பற்ற வைப்பது குற்றம் என கூறியுள்ள வனத்துறையினர் எச்சரிக்கையுடன் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

The post வால்பாறையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; யானை, கரடி, செந்நாய் போன்ற விலங்குகள் எஸ்டேட் பகுதிகளில் முகாம்: வன விலங்குகள் தென்பட்டால் தகவல் அளிக்க வனத்துறை வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Valparai ,Forest Department ,Congreve Falls ,Birla… ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில்...