×

மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்

காஞ்சிபுரம்,பிப்.21:காஞ்சிபுரம் காந்தி ரோடு பகுதியில் “ஜானி பாஷா’’ என்ற படுக்கை, மெத்தை மற்றும் பாய்கள் தயாரித்து விற்பனை செய்யும் கடை உள்ளது. பிரபலமான, இந்த கடையின் மற்றொரு உற்பத்தி மற்றும் குடோன் காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் உள்ள எம்எம் அவென்யூ பகுதியில் பள்ளிக்கூடத்தான் தெருவில் இயங்கி வருகிறது. இங்கு இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் செயற்கை பஞ்சு மூலம் தலையணை மற்றும் மெத்தைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள், மெத்தை தயாரிக்கும் குடோனில் மின் இணைப்பை ஆன் செய்துள்ளனர். அப்போது, திடீரென ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு மெத்தை தயாரிக்கும் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றில் திடீரென தீ பற்றியது.

இதனால், தயாரித்து வைத்திருந்த மெத்தைகளும் இந்த தீயில் எரிய துவங்க, 3 அடுக்கு மாடி வீடாக இருப்பதால் தீ மள மளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. உடனே ஊழியர்கள் வெளியேறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினர் 10க்கும் மேற்பட்டோர், 2 வண்டிகளில் வந்து போராடி தீயை அணைத்தனர். இதனால், ஏற்பட்ட கரும்புகை சுமார் 1 கிமீ சுற்றளவுக்கு பரவியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. கட்டிடத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த, தீவிபத்தில் லட்சக்கணக்கான மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்துள்ள விஷ்ணுகாஞ்சி போலீசார் தீவிபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மெத்தை தயாரிக்கும் நிறுவனம் மற்றும் குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தததால் அக்கம் பக்கத்தினர் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது.

The post மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram, PP.21 ,Johnny Pasha ,Kanchipuram Gandhi Road ,MM Avenue ,Kudon Kanchipuram ,Dinakaran ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...