வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கம் ஊராட்சியில் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கம் ஊராட்சி இங்கு மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், ஊராட்சியில் ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், கட்டவாக்கம் ஊராட்சியில் அதிக அளவில் கல்லூரி மாணவர்கள், தொழிற்சாலை பணிகளுக்கு செல்லும் இளைஞர்கள் அதிகப்படியானோர் உள்ளனர். இந்நிலையில், விடுமுறை நாட்கள் மட்டுமின்றி நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதற்காக உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி இளைஞர்களும், மாணவர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட கட்டவாக்கம் ஊராட்சி இங்கு பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதற்கான எந்தவித முகாந்திரமும் ஊராட்சியில் இல்லை.
இதுபோன்ற நிலையில், பல்வேறு ஊராட்சிகள் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் எங்கள் ஊராட்சியில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுபோன்ற நிலையில், சட்டமன்ற உறுப்பினர் நிதியோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலேயே இங்கு உடற்பயிற்சி கூடம் அமைத்து தந்தால் வருங்கால இளைஞர்களின் எதிர்காலம் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உடற்பயிற்சி கூடம் அமைத்து தர ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவு விட வேண்டும் என இப்பகுதி கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.
The post கட்டவாக்கம் ஊராட்சியில் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்: இளைஞர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.
