- தைப்பூச ஜோதி விழா
- ஆதிபராசக்தி சித்தர் பீடம்
- மேல்மருவத்தூர்
- தைப்பூசம்
- ஆதிபராசக்தி
- சித்தர் பீடம்
- சித்தர் பீடம்...
மேல்மருவத்தூர்: ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கோலாகலமாக தைப்பூச ஜோதி விழா நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று மாலை 7.30 மணி அளவில் நடைபெற்றது. இந்த தைப்பூச நிகழ்ச்சி ஆனது சித்தர் பீடத்தில் நேற்று விடியற்காலை 3 மணி அளவில் மங்கல இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் குருபீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் திருவுருவச் சிலைக்கும் ஆதிபராசக்தி அம்மனுக்கும் அபிஷேக அலங்கார தீபாரதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, 10:30 மணிக்கு சித்தர் பீடத்திற்கு சென்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு ஈரோடு மாவட்டம் சார்பாக பொறுப்பாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, காலை 10.40 ஆன்மிக இயக்கத்தின் துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாலை 4 மணிக்கு டிரம்ஸ் இசை கலைஞர் சிவமணி மற்றும் புகழ்பெற்ற வயலின் கலைஞர் அபிஜித்தின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்கு ஆன்மிக இயக்கத்தின் துணைத்தலைவர் கோ.ப.அன்பழகன் தலைமையில் தைப்பூச ஜோதி ஊர்வலம் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் இல்லத்தில் இருந்து தொடங்கியது. இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சக்தி சித்தர் பீட தொண்டர்களும், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் அவர்களது பாரம்பரிய உடை அணிந்து அனைவரையும் கவரும் விதத்தில் நடனமாடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட நடன குழுவினரும் தெய்வங்களின் வேடம் அணிந்தும் ஏராளமான பக்தர்கள் ஜோதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மேல்மருவத்தூர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று பொறியியல் கல்லூரி மைதானத்தை சென்ற அடைந்தனர். மாலை 6.15 மணிக்கு தைப்பூச ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய இயக்குனர் ராஜராஜன், வருமான வரித்துறை துணைஆணையர் நந்தகுமார் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், டாக்டர் கௌசிகா, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நீதியரசர் ராஜேஸ்வரன், கூடுதல் வருவாய் துறை நிர்வாக ஆணையர் நடராஜன் ஆகியோர் ஜோதி ஏற்றி வழிபட்டனர்.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு ஆன்மிக இயக்க துணைத்தலைவர் உமாதேவி ஜெய்கணேஷ் அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்க தலைமை செயல் அதிகாரி அகத்தியன், லட்சுமி பங்காரு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் ஆஷா அன்பழகன், ஆதிபராசக்தி செவிலியர் கல்லூரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில்குமார், டாக்டர்கள் மது மலர், பிரசன்ன வெங்கடேஷ், இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிர்வாகிகளும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
The post மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா கோலாகலம் appeared first on Dinakaran.
