வாஷிங்டன்: மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்க வளைகுடா’ என பெயர் மாற்றிய டிரம்ப், இதற்கான உத்தரவை விமானத்தில் பறந்து கொண்டே பிறப்பித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றப் போவதாக சமீபத்தில் அறிவித்தார். தற்போது அதற்கான உத்தரவில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளார். மேலும், ஒரு நிர்வாக உத்தரவு மூலம் நேற்றை தேதியை, ‘வளைகுடா அமெரிக்க நாள்’ என அறிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 4ம் தேதியன்று புளோரிடாவில் நடந்த செய்தியார் சந்திப்பின்போது பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘விரைவில் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றப்போகிறோம்’ என அறிவித்தார். மெக்சிகோ வளைகுடாவை, அமெரிக்க வளைகுடா என பெயரை மறுமாற்றம் செய்யும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டது சாதாரணமாக நடக்கவில்லை. மாறாக மெக்சிகோவிற்கு கால்பந்து போட்டியை காண விமானத்தில் பறந்துகொண்டிருந்தபோது, பெயர் மறுமாற்றத்திற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மேலும், ஒரு நிர்வாக உத்தரவின் மூலம், பிப்ரவரி 9ம் தேதியை, ‘வளைகுடா அமெரிக்க நாள்’ என்றும் அறிவித்துள்ளார். இதேபோல், வட அமெரிக்காவில் உள்ள உயரமான மலையான டனாலியின் பெயரையும், ‘மெக்கன்லி மலை’ என டிரம்ப் மாற்றியுள்ளார். ஏற்கனவே, மெக்சிகோ நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் அறிவித்தார். இதனால் இரு நாடுகளுக்குமிடையே மோதல் போக்கு தொடங்கியது.
மெக்சிகோவும் பதிலடி கொடுக்கும் விதமாக அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் ஒன்று, ஆப்பிள் நிறுவன பொருட்களிலிருந்து சாம்சங் நிறுவன பொருட்களுக்கு மாறிவிடுவோம் என மிரட்டியது. இப்படி, இரண்டு நாடுகளும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு பதற்றமான சூழலை ஏற்படுத்தின. எனினும், மெக்சிகோ எல்லையில் 10,000 படை வீரர்களை அமெரிக்க நிறுத்துவதற்கு மெக்சிகோ ஒப்புக்கொண்ட நிலையில், அந்நாட்டு பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில், தற்போது மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்க வளைகுடா’ என டிரம்ப் பெயர் மாற்றியுள்ளதற்கு, மெக்சிகோ என்ன எதிர்வினையாற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The post மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்க வளைகுடா’ என பெயர் மாற்றிய டிரம்ப்: விமானத்தில் பறந்து கொண்டே உத்தரவு appeared first on Dinakaran.
