×

பெங்களூருவில் 15-வது விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்

கர்நாடகா: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளி மற்றும் ராணுவ கண்காட்சியாகக் கருதப்படும் ஏரோ இந்தியா விமான கண்காட்சி இதுவரை 14 தடவை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 15-வது விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று தொடங்கியது. கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்ச்சியை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், பாதுகாப்பு படைத் தலைவர், முப்படைத் தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சூரிய கிரண் ஏரோபாட்டிக் குழுவின் பிஏஇ ஹாக் எம்கே-132 ரக சிறிய ரக விமானங்கள், தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ணப்பொடிகளை வானில் தூவி அலங்கரித்தபடி சீறிப்பாய்ந்து சென்றது பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.

இந்திய விமானப்படையின் இலகு ரக விமானமான தேஜாஸ் மார்க் 1ஏ மற்றும் போர் விமானமான சுகோய் சு-30 எம்கேஐ போன்ற விமானங்கள் வானில் மாயாஜாலங்களை நிகழ்த்தின. விமான சாகசங்களை கண்டுகளிக்க ஏராளமான பார்வையாளர்கள் திரண்டுள்ளனர்.

இதுதவிர பாதுகாப்புத் துறை மந்திரிகள் மாநாடு, தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேசை மாநாடு, இந்தியா ஐடெக்ஸ் அரங்குகளின் திறப்பு விழா மற்றும் கருத்தரங்குகளும் நடைபெற உள்ளன. 14-ம் தேதி வரை 5 நாட்கள், தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெற உள்ளது. காலை ஒருமுறையும், மதியம் ஒருமுறையும் என 2 முறை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. 42,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் நடைபெறும் கண்காட்சியில், 150 வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன.

The post பெங்களூருவில் 15-வது விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Rajnath Singh ,15th Aviation Exhibition ,Bangalore ,Karnataka ,Indian Army Air Show ,Asia ,Aero India Air Show ,15th ,15th Air Exhibition ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...