
புதுடெல்லி: சிக்கிமில் டீஸ்டா -3 நீர்மின் திட்டத்துக்கு அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. சிக்கிமில் கடந்த 2023ம் ஆண்டு பனிப்பாறை ஏரி வெள்ளத்தில் டீஸ்டா அணை அடித்துச்செல்லப்பட்டது. இந்நிலையில் டீஸ்டா -3 அணையின் வடிவமைப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்த கேள்விகள் இருந்தபோதிலும், அதனை மீண்டும் கட்டுவதற்கு ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் டீஸ்டா-3 நீர் மின் திட்டத்திற்கான அணை கட்டுவதை அனுமதிப்பதில் உள்ள பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து சிக்கிம் பாஜ தலைவர் இந்த மாத இறுதியில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவை சந்தித்து பேசுவார் என்ற ஊடக அறிக்கையை பகிர்ந்துள்ளார். மேலும் அவர், ‘‘அணைப்பகுதியில் பேரழிவு அச்சுறுத்தல் தொடர்கிறது. எனினும் சிறிதும் சிந்திக்காமல் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதியை காங்கிரஸ் எதிர்க்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
The post டீஸ்டா அணையை மீண்டும் கட்டுவதற்கு யோசிக்காமல் அரசு அனுமதி: காங். கட்சி சாடல் appeared first on Dinakaran.
