×

மர்ம ஆசாமிகள் கடிதம் அனுப்பி என்எல்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் விசாரணை

நெய்வேலி, பிப். 5: கடிதம் அனுப்பி என்எல்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நெய்வேலியில் உள்ள என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் என்எல்சி பொது மருத்துவமனையின் தலைமை அதிகாரிக்கு எந்த விலாசமும் இல்லாமல் கடிதம் ஒன்று வந்தது. மர்ம ஆசாமிகள் எழுதியுள்ள அந்த கடிதத்தை பிரித்து பார்த்தபோது அதில், ‘என்எல்சி பொது மருத்துவமனைக்கு வெடிகுண்டு வைத்துள்ளோம்’ என எழுதியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த என்எல்சி அதிகாரிகள் இதுகுறித்து நெய்வேலி நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் (பொறுப்பு‌) செந்தில்குமார் தலைமையில் போலீசார் என்எல்சி பொது மருத்துவமனைக்கு சென்று பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர்.

மேலும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் காவல்துறையினருக்கு ஒத்துழைக்குமாறும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டார். மேலும் கடலூரில் இருந்து கைரேகை மற்றும் மெட்டல் டிடெக்டர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவமனை முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் லியோவும் வரவழைக்கப்பட்டது. இறுதியாக மருத்துவமனையில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியவர் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மர்ம ஆசாமிகள் கடிதம் அனுப்பி என்எல்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : NLC Hospital ,Neyveli ,NLC India Company ,Neyveli, Cuddalore district ,Dinakaran ,
× RELATED ஓட்டலில் மனித கறி கேட்டு தகராறு சமையல் மாஸ்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு