×

ரஞ்சி கோப்பை தமிழ்நாடு 106 ரன்னில் ஆல்அவுட்

டெல்லி: ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரில் தமிழ்நாடு உள்பட 32 அணிகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் விளையாடி வருகின்றன. இதன் கடைசி லீக் போட்டிகள் நேற்று துவங்கின. ஜாம்ஷெட்பூரில் நடந்த போட்டியில் தமிழ்நாடு- ஜார்கண்ட் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஜார்கண்ட் 185 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக சரண்தீப் சிங் 52 ரன், விராட் சிங் 40 ரன், அங்குல் ராய் 46 ரன் எடுத்தனர். இந்த அணியின் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான இஷான் கிசான் 15 பந்துகளை சந்தித்து வெறும் 8 ரன்களே எடுத்தார். தமிழ்நாடு தரப்பில் ஷாய் கிஷோர், அஜித் ராம் தலா 3 விக்கெட்கள், முகம்மது, லக்‌ஷாய் ஜெயின் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய தமிழ்நாடு அணி 106 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக முகமது அலி 37 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷாய் கிஷோர் 4 ரன், விஜய் சங்கர் 17 ரன்கள் எடுத்தனர். ஜார்கண்ட் அணி தரப்பில் உத்கார்ஷ் சிங் 6 விக்கெட்டுகள், மனிஷி 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

* ஷர்துல் தாக்கூர் ஹாட்ரிக்
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய மேகாலயா அணி 86 ரன்களுக்குள் ஆல்அவுட் ஆனது. இந்த அணியின் 5 பேட்ஸ்மேன்கள் கணக்கை துவங்காமலே 0 ரன்களில் அவுட்டாகினர். இதில் 3 பேரை அவுட் ஆக்கி ஹாட்ரிக் விக்கெட் சாதனை படைத்தார் ஷர்துல் தாக்கூர். மொத்தம் 11 ஓவர் பந்து வீசி 3 மெய்டன் எடுத்து 43 ரன்கள் கொடுத்து மொத்தம் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய மும்பை அணி ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரகானே 83 ரன், சித்தேஷ் லாத் 89 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

The post ரஞ்சி கோப்பை தமிழ்நாடு 106 ரன்னில் ஆல்அவுட் appeared first on Dinakaran.

Tags : Ranji Cup Tamil Nadu ,Delhi ,Tamil Nadu ,Ranji Cup Test ,Jharkhand ,Jamshedpur ,Dinakaran ,
× RELATED வெ.இ.க்கு எதிரான 3வது டெஸ்டில்: வெற்றி...