×

கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி கூற வேண்டும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: உச்ச நீதிமன்றம் மீண்டும் அதிரடி

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு வழக்கில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தையும் ஒரு தரப்பாக சேர்க்கக்கோரி கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘கேரளாவில் பருவ மழை காலம் வரவுள்ளது. ஒருவேளை அணை உடைந்தால் 50லட்சம் மக்கள் பாதிப்படைவார்கள். மேலும் லட்சக் கணக்கானோர் உயிரிழக்க நேரிடும். அதனால் தற்போது உள்ள முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து புதிய அணைக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘முல்லைப் பெரியாறு அணை 130 ஆண்டுகள் மேல் இருக்கும் அணை ஆகும். எத்தனை பருவ மழையை அது கண்டுள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக அணை இன்னமும் உறுதியாக உள்ளது. மக்கள் அணை உடைந்து விடும் என்னும் அச்சத்தில் உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் உங்களது அச்சம் என்பது காமிக்ஸ் கதைகளை போல அச்ச உணர்வில் உள்ளதாக நாங்கள் தான் உணர்கிறோம். நாங்களும் கேராளவில் வசித்துள்ளோம்.

முல்லைப் பெரியாறு அணை நமது வயதை விட இரு மடங்கு வயதிலும், நிலையானதாகவும், உறுதியாகவும் உள்ளது. பல பருவ மழையை கண்டும் நிலைத்துள்ள அணையை கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் வேறு அமர்வு விசாரித்து வருவதால், இந்த வழக்கையும் அந்த மனுக்களோடு இணைத்து விசாரிக்க பட்டியலிட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி கூற வேண்டும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: உச்ச நீதிமன்றம் மீண்டும் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Mullaperiyar Dam ,Joy Joseph ,Kerala ,Union Water Resources Ministry ,Mullaperiyar ,Dinakaran ,
× RELATED 16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப்...