தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமமுக முன்னாள் நிர்வாகி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி, எட்டயபுரம் ரோடு, ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் சிவா என்ற பரமசிவம் (41). இவர் தூத்துக்குடியில் 3 இடங்களில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள், ஒரு மகன் உள்ளனர். அமமுகவில் முன்னாள் ஜெ.பேரவை மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் மீது தூத்துக்குடி சிப்காட் போலீசில் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரும், தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜூம் (42) நண்பர்கள். நேற்று முன்தினம் பரமசிவம் வீட்டில் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்ததால், அவரும், மோகன்ராஜூம் மது அருந்தியுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் மோகன்ராஜ் கழுத்தில் போட்டிருந்த துண்டால் பரமசிவத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிகிறது. வெளியூர் சென்று விட்டு நேற்று காலை வீட்டுக்கு திரும்பிய பரமசிவம் குடும்பத்தினர், பரமசிவம் மயங்கி கிடப்பதாக கருதி, தூத்துக்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின்படி தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து, முத்துகிருஷ்ணாபுரத்தில் பதுங்கியிருந்த மோகன்ராஜை நேற்று கைது செய்தனர். அவர், 4 ஆண்டுக்கு முன்பு தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி பட்டு என்ற பட்டுராஜின் கோஷ்டியைச் சேர்ந்தவர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
The post அமமுக மாஜி நிர்வாகி கழுத்து நெரித்து கொலை: பிரபல ரவுடி கைது appeared first on Dinakaran.
