சென்னை: திருத்தணியில் வாலிபரை பட்டா கத்தியால் வெட்டிய சம்பவத்தில் வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவது தவறு என வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. விளக்கம் அளித்துள்ளார். மேலும், நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டு 2 பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருத்தணியில் கடந்த 27ம் தேதி வடமாநில வாலிபர் 4 சிறுவர்களால் தாக்கப்பட்ட சம்பவ வீடியோ சமூக வலைதளங்களில் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கு சம்பந்தமாக வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி அஸ்ரா கார்க் ஆலந்தூரில் உள்ள வடக்கு மண்டல காவல் அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கடந்த 27ம் தேதி ஒரு அசம்பாவித சம்பவம் திருத்தணியில் நடந்தது பாதிக்கபட்ட நபர் தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளியாக வேலைக்கு வரவில்லை. இங்கு அவர் வேலை செய்யவில்லை. 2 மாதத்திற்கு முன்பு வந்துள்ளார். சென்னை, திருத்தணி, அரக்கோணம் போன்ற பகுதிகளுக்கு ரயில் பயணம் செய்துள்ளார். அப்படி 27ம் தேதி சென்னையிலிருந்து ரயிலில் பயணம் செய்யும்போது 4 நபர்கள் வாலிபரை தாக்கி உள்ளனர். பின்னர் மிரட்டி திருத்தணி ரயில் நிலையத்தில் இறக்கி பட்டா கத்தியால் வெட்டி அதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அங்கு சென்று பாதிக்கபட்ட நபரை திருவள்ளூர் அரசு மருத்துவமனை சென்று மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைக்க வேண்டும், மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 18 வயதுக்கு குறைந்தவர்களை குற்றவாளிகள் எனக் குறிப்பிடக்கூடாது என்பதால் இந்த 4 பேர் மீதும் சிறார்கள் சட்டப்படி பிஎன்எஸ் 109 பிரிவின் கீழ்வழக்கு பதிவு செய்து கடந்த 28ம் தேதி 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி 3 பேர் செங்கல்பட்டு சிறார் இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர். இதில் ஒருவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இவர்களிடம் இருந்து 2 பட்டா கத்தி மற்றும் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல பாதிக்கப்பட்ட நபருக்கு தமிழ் மொழி தெரியாததால் அவருடைய மொழியை தெரிந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மூலம் பேசி மொழிபெயர்ப்பு செய்து புகாராக பெறப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கபட்ட நபர் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கையெழுத்து போட்டுவிட்டு தன் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டுள்ளார். அவர் நன்றாக இருக்கிறார். மேலும் வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவது தவறு.
வட தமிழகத்தில் தொழிலாளர்கள் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களில் இதுபோன்று தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. சிறு சிறு சம்பவம் ஒன்று இரண்டு நடைபெற்றாலும் அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் தாக்குதல் நடத்திய நபர்கள் போதை காரணமாக தாக்குதல் நடத்தியதாக தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. அது தொடர்பாக விசாரணை நடைபெற்றும் வருகிறது. போதை பொருட்களை காவல்துறை தொடர்ந்து கைப்பற்றி வருகிறது. சமீபத்தில் கூட ஒடிசா மற்றும் ஆந்திரா வரை சென்று 1000 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு அதை கொண்டு வரும் நபர்களை கைது செய்து உள்ளோம். திருவள்ளூரில் மட்டும் இந்த ஆண்டில் 102 கிலோ கஞ்சா, 447 மெத்தபெட்டமின், போதை மாத்திரைகள் 51 ஆயிரத்து 95 கைப்பற்றப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் இளைஞர்கள் போதை பொருட்கள் மற்றும் பட்டா கத்தி வைத்து வீடியோ போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். காவல்துறை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இளைஞர்கள் அப்டேட் செய்யும் வீடியோவை கண்காணித்து வருகிறது. தொடக்க காலத்திலேயே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது சிறார்கள் என்றால் பெற்றோர்களை அழைத்து பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகிறது.இவ்வாறு ஐஜி அஸ்ரா கார்க் கூறினா்ர். காவல்துறை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இளைஞர்கள் அப்டேட் செய்யும் வீடியோவை கண்காணித்து வருகிறது.
