மும்பை: மும்பையை சேர்ந்த கட்டுமானத் தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற பிரபல நடிகையின் மருமகள் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.மராத்தி திரையுலகின் மூத்த நடிகையான அர்ச்சனா பட்கர் என்பவரின் மருமகளும், நடிகையுமான ஹேமலதா பட்கர் என்கிற ஹேமலதா பன்னே என்பவர், கடந்த 2012ம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் மும்பை கோரேகான் பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலதிபர் அரவிந்த் கோயல் என்பவரின் மகன் ரிதம் கோயல், கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி ஓட்டலில் நடந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அங்கிருந்த ஹேமலதா பன்னே மற்றும் அவரது தோழி அமரினா இக்பால் ஜவேரி ஆகியோருக்கும், ரிதம் கோயலுக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரிதம் கோயல் மீது அம்போலி காவல் நிலையத்தில் பெண்கள் இருவரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்து வழக்கு பதிவு செய்ய வைத்தனர். அப்போது பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டுமானால் 10 கோடி ரூபாய் தர வேண்டும் என ஹேமலதா தரப்பினர் தொழிலதிபரை தொடர்பு கொண்டு மிரட்டினர்.
‘பணம் தராவிட்டால் உங்கள் மகனின் வாழ்க்கை நாசமாகிவிடும், அவர் 15 முதல் 20 ஆண்டுகள் வரை சிறையில் கழிக்க நேரிடும்’ என ஹேமலதா மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இறுதியில் 5.5 கோடி ரூபாய் தருவதாக இருதரப்பிலும் பேரம் பேசி முடிக்கப்பட்டது. இதுகுறித்து தொழிலதிபர் அரவிந்த் கோயல் போலீசில் ரகசிய புகார் அளித்தார். போலீசாரின் திட்டப்படி முன்பணமாக 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான போலியான நோட்டுகட்டுகளுடன் கடந்த 23ம் தேதி நடிகையை சந்திக்க தொழிலதிபர் சென்றார். அப்போது பணத்தை வாங்கியபோது மறைந்திருந்த தனிப்படை போலீசார் நடிகை ஹேமலதா மற்றும் அவரது தோழியை கையும் களவுமாக பிடித்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
