கரூர்: கரூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் அதிபரின் ரூ.80 லட்சம் உயர் ரக காரை பறித்து சென்று மோசடி செய்ததாக சின்னத்திரை நடிகை, அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்ராஜ் (45). கரூர் – கோவை சாலையில் நட்சத்திர ஓட்டல் நடத்தி வருகிறார். சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி (எ) பாலமுருகன் (50). இவரது மனைவி ராணி (45). சின்னத்திரை நடிகையாக உள்ளார். கடந்த மே மாதம் தனது நண்பர் புருசோத்தமனுடன் கரூர் வந்த பாலமுருகன், அங்கு நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் தினேஷ்ராஜை நேரில் சந்தித்தார்.
நட்சத்திர ஓட்டலை தனது நண்பர் புருசோத்தமன் பெயரில் ஒரு வருடத்திற்கு குத்தகைக்கு எடுப்பதாகவும், இதற்கான தொகை ரூ.10 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளார். அதன்படி ஒரு வருடத்திற்கான பத்திரமும் பதிவு செய்துள்ளனர். ஆனால் பேசியப்படி குத்தகை தொகை ரூ.10லட்சம் கொடுப்பதற்கு காலதாமதமானதால் பாலமுருகனிடம் ஓட்டலை ஒப்படைக்காமல் தினேஷ்ராஜ் இருந்துள்ளார். இதனால் தினேஷ்ராஜ் வைத்திருந்த ரூ.80 லட்சம் மதிப்பிலான உயர்ரக காரை, தனது மனைவி ராணியிடம் காண்பித்து விட்டு கொண்டு வருவதாக பாலமுருகன் கூறி அந்த காரை எடுத்து சென்றார். ஆனால் காரை எடுத்து சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. செல்போனில் அவரை தொடர்பு கொண்டும் முடிய வில்லை.
இதில் சந்தேகம் அடைந்த தினேஷ்ராஜ், கடந்த 2ம்தேதி சென்னை வளசரவாக்கம் சென்று அங்கு பாலமுருகனை நேரில் சந்தித்து கார் குறித்து கேட்டுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த பாலமுருகன், மனைவி ராணி, நண்பர் புருசோத்தமன் ஆகியோர் சேர்ந்து தினேஷ்ராஜை தரக்குறைவாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கடந்த 16ம் தேதி கரூர் டவுன் காவல் நிலையத்தில் தினேஷ்ராஜ் புகார் கொடுத்தார். அதில், ரூ.80லட்சம் மதிப்பிலான உயர்ரக காரை தன்னிடம் இருந்து பாலமுருகன் ஏமாற்றி வாங்கி சென்றார். அந்த காரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைரத்தோடு இருந்தது. இதுதொடர்பாக பாலமுருகன், மனைவி ராணி, நண்பர் புருசோத்தமன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார், குற்றம்சாட்டப்பட்ட பாலமுருகன், இவரது மனைவி ராணி மற்றும் நண்பர் புருஷோத்தமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைதொடர்ந்து கடந்த 27ம்தேதி சென்னைக்கு சென்ற போலீசார், புருஷோத்தமனை பிடித்து கரூர் அழைத்து வந்தனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு சம்பந்தமாக பாலமுருகன், அவரது மனைவி சின்னத்திரை நடிகையான ராணி ஆகியோர் டிச.31ம்தேதிக்குள் (நாளை) விசாரணைக்காக நேரில் கரூர் டவுன் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
