×

காஞ்சி கூரத்தாழ்வார் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கூரத்தாழ்வார் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவ தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் – அரக்கோணம் செல்லும் சாலை, கூரம் கிராமத்தில் கூரத்தாழ்வார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளும், கூரத்தாழ்வாரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலின், 1015வது வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 11ம்தேதி (சனிக்கிழமை) தொடங்கியது.

விழாவையொட்டி, தினசரி காலையில் பல்லக்கிலும், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகியும் உற்சவர் கூரத்தாழ்வார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கூரத்தாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் வைர, வைடூரிய ஆபரணங்கள் அணிந்து, தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். மாலையில் ஹம்ச வாகனத்தில் கூரத்தாழ்வார் வீதியுலா வந்தார். வரும் 23ம்தேதி புஷ்ப பல்லக்கில் பவனி வரும் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் கே.வரதராஜன், அறங்காவலர் பராசர அழகிய சிங்க பட்டர் நிர்வாகி வி.சுதர்சன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

The post காஞ்சி கூரத்தாழ்வார் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kanchi ,Kurathalwar Temple Therottam ,Kanchipuram ,Brahmotsava Therottam ,Kurathalwar Temple ,Kuram village ,Kanchipuram-Arakkonam road ,Sri Aadikesavam ,Kanchi Kurathalwar Temple Therottam ,
× RELATED சாதி பெயரைச் சொல்லி தாக்குதல் பெண்...