×

வரும் 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் பல்லாவரம் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்: மதுரவாயலில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

சென்னை: வரும் 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பல்லாவரத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: அன்னை தமிழ்காக்க, முதற்கட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு, சிறை சென்ற நடராசன் 15.1.1939 அன்றும், தாளமுத்து 12.3.1939 அன்றும் வீர மரணம் அடைந்தனர். தமிழக மக்களின் தொடர் போராட்டத்தால் அரசு 21.2.1940ல் கட்டாய இந்தி திணிப்பை கைவிடும் முடிவுக்கு வந்தது. அன்னை தமிழின் அருந்தவப் புதல்வர்களாம்- கீழப்பழுவூர் சின்னச்சாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, பீளமேடு தண்டபாணி, சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், தீக்குளித்தும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரின் தீரத்தை நினைவு கூர்ந்திடும் நாள் தான் வருகிற 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்.

உலக வரலாற்றில், நாட்டின் விடுதலைக்காக, இனப்போராடத்திற்காக தங்களை மாய்த்துக் கொண்டோர் நிரம்ப உண்டு. ஒரு மொழிக்காக, தங்களது வாழ்க்கையையே சுருக்கி கொண்டு-கருகியவர்கள் உண்டு என்றால், அது தமிழ் மக்களையே சாரும். இந்தியை திணிக்க முயன்றோருக்கும், முயல்வோருக்கும் அச்சத்தை உருவாக்கிவிட்டு சென்றுள்ள மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திட, பொதுக்கூட்டங்கள் நடத்தி அவர்கள் கொண்டிருந்த தூய தமிழுணர்வுடன் நாமும் வாழ்ந்திட வேண்டும் என்ற சூளுரையை இந்நாளில் மேற்கொண்டிட திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டி முதல் பட்டினக்கரை வரை, திமுக மாணவர் அணியின் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவோர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல்லாவரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொள்கின்றனர். காஞ்சிபுரம்-பொதுச் செயலாளர் துரைமுருகன், திருச்சி-முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, மதுரவாயல்-துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மதுரை-திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சேலம்-அமைச்சர் எ.வ.வேலு, எழும்பூர்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தி.நகர்- தயாநிதிமாறன் எம்பியும் பங்கேற்று வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் பேசுகின்றனர்.

The post வரும் 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் பல்லாவரம் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்: மதுரவாயலில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Pallavaram ,Language War Martyrs' Memorial Day ,Deputy Chief Minister ,Udhayanidhi ,Maduravayal ,Chennai ,DMK Student Union ,CVMP ,Ezhilarasan ,MLA ,Kakka ,
× RELATED மொத்த நன்கொடையில் 82 சதவீதம் பாஜ...