சென்னை: விக்கிரவாண்டியில் உள்ள பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் எல்கேஜி மாணவி விழுந்து உயிரிழந்தத சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்டோருக்கு எதிராக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்ற கோரி பலியான சிறுமியின் தந்தை பழனிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பெற்றோருக்கு முறையாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை. பள்ளி நிர்வாகம், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அழிக்கவும், சாட்சிகளை கலைக்கவும் வாய்ப்புள்ளது. குழந்தையின் உடையில் ரத்தக்கறை குறித்து போலீசாரிடம் தெரிவித்தபோது, உடையை திருப்பி தரும்படியும், இல்லாவிட்டால் வழக்கை முடித்து வைத்து விடுவதாக விக்கிரவாண்டி போலீசார் மிரட்டினர்.
குழந்தை மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர் எஸ். வினோத்குமார், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென்று கோரினார். அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இடைக்கால உத்தரவாக சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து வைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றார். பதில் மனுத்தாக்கல் செய்த பிறகு அது குறித்து முடிவெடுக்கலாம் என்று தெரிவித்த நீதிபதி மனு குறித்து டிஜிபி மற்றும் சிபிஐ உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
The post கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி சிபிஐக்கு விசாரணையை மாற்றக்கோரி தந்தை மனு: காவல்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
