- ஸ்ரீபெரும்புதூர் யூனியன்
- ஸ்ரீபெரும்புதூர்
- ஸ்ரீபேரம்புதூர் ஊராட்சி ஒன்றியம்
- 2வது வார்டு
- சுயேச்சை கவுன்சிலர்
- தியாகராஜன்
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் மொத்தம் 58 ஊராட்சிகள் உள்ளன. அதேபோல் 16 ஒன்றிய குழு உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், 2வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் தியாகராஜன் கொசு வலையை போர்த்தியவாறு கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பிற்காக கடந்த 2 மாதத்தில் ரூ.12 லட்சம் வரை பணி செய்ததாகவும், அதேபோல் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள 2 ஏசி இயந்திரத்தை பழுது நீக்கியதாக ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளதாக புகார் தெரிவித்தார்.
மேலும், ஒன்றிய குழு தலைவரின் வாகன பழுது, பிடிஓ அலுவலகத்தை தூய்மை செய்தது என பல லட்சம் முறைகேடு நடந்துள்ளது. மேலும், ஸ்ரீபெரும்புதூர் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி, அயோத்திதாசர் பண்டிதர் நிதி என பல்வேறு நிதிகளில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பணி நடந்தாலும் தனது வார்டில் உள்ள நெமிலி, செங்காடு, கிளாய் போன்ற ஊராட்சிகளில் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினார். ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தனக்கு சாதகமாகவும் அவரது முறைகேடுகளை தட்டிக் கேட்காக பகுதிகளில் இந்த நிதியின் மூலம் பணிகளை செய்து வருகிறார். எனவே, தனது வார்டுக்கு உட்பட்ட ஊராட்சிகளை மக்கள் பணி செய்யவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனிடையே மன்ற கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு சலசலப்பு ஏற்பட்டதால் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சிலரிடம் கையெழுத்து வாங்கி அவசர அவரசமாக மன்ற கூட்டத்தை நடத்தாமலேயே அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post டெங்கு காய்ச்சலை தடுப்பதாக கூறி ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பல லட்சம் முறைகேடு: கொசு வலையுடன் வந்த கவுன்சிலரால் பரபரப்பு appeared first on Dinakaran.
