×

3வது சுற்றுக்கு முன்னேறினார் சபாஷ் சபலென்கா! ஜோகோவிச் அல்காரஸ் காப் அபாரம்

மெல்போர்ன்: இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றில் முதல் நிலை வீராங்கனை அரைனா சபலென்கா, 3ம் நிலை வீராங்கனை கோகோ காப், ஆண்கள் பிரிவில் 7ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் அபாரமாக ஆடி 3ம் சுற்றுக்கு முன்னேறினர். ஆஸி ஓபன் டென்னிஸ் போட்டிகள் கடந்த 12ம் தேதி துவங்கி நடந்து வருகின்றன. நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த 2ம் சுற்று போட்டி ஒன்றில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரைனா சபலென்கா – ஸ்பெயினை சேர்ந்த ஜெஸிகா பூஸாஸ் மோதினர்.

முதல் செட்டை எளிதாக கைப்பற்றிய சபலென்கா 2வது செட்டில் சற்று சிரமப்பட்டு கைப்பற்றினார். இதையடுத்து, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் அவர் வென்று 3ம் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீராங்கனை கோகோ காப்- கிரேட் பிரிட்டன் வீராங்கனை ஜோடீ புரேஜ் மோதினர். முதல் செட்டை அதிரடியாக, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய காப், 2வது சுற்றில் சற்று திணறினாலும், 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி வென்றார். இதனால், 3ம் சுற்றுக்கு அவர் முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த, உலகின் 14ம் நிலை வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா – ஜப்பானின் மொயுகா உச்சிஜிமா மோதினர். முதல் செட்டை எளிதில் வென்ற ஆண்ட்ரீவா, 2வது செட்டை மோசமாக ஆடி இழந்தார். 3வது செட் போட்டியும் கடும் சவாலாக இருந்தது. இருப்பினும் அதையும் கைப்பற்றிய ஆண்ட்ரீவா, 6-4, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார். ஆண்கள் பிரிவில் டென்னிஸ் ஜாம்பவான், செர்பியாவை சேர்ந்த உலகின் 7ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் – போர்ச்சுகல் வீரர் ஜெய்மி பரியா மோதினர்.

முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய ஜோகோவிச், 2வது செட்டை இழந்தார். பின் சுதாரித்து 3 மற்றும் 4வது செட்களை கைப்பற்றினார். இதன் மூலம் 6-1, 6-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3ம் சுற்றுக்கு முன்னேறினார்.
இன்னொரு போட்டியில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் – ஜப்பான் வீரர் யோஸிதோ நிஷியோகா மோதினர். இந்த போட்டியில் வெறித்தனமாக ஆடிய அல்காரஸ், 6-0, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 3ம் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் நார்வேயை சேர்ந்த உலகின் 6ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட், செக் வீரர் ஜேகுப் மென்சிக் மோதினர். இருவரும் சிறப்பாக ஆடியதால் கடும் போட்டி நிலவியது. 1 மற்றும் 3வது செட்களை மென்சிக் கைப்பற்றினார். 2வது செட் ரூட்டுக்கு சென்றது. தொடர்ந்து 4வது செட்டையும் மென்சிக் கைப்பற்றி 3வது சுற்றுக்கு முன்னேறினார். இதில் 2-6, 6-3, 1-6, 4-6 என்ற கணக்கில் ரூட் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

* இந்தியாவின் யூகி பாம்ப்ரி இரட்டையர் பிரிவில் தோல்வி
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்று போட்டி ஒன்றில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி இணை, ஆஸ்திரேலியாவின் டிரிஸ்டான் ஸ்கூல்கேட், ஆடம் வால்டன் இணையுடன் மோதியது. முதல் செட்டை எளிதாக இழந்த பாம்ப்ரி, ஒலிவெட்டி இணை, 2வது செட்டை போராடி பறிகொடுத்தது. இதனால், 6-2, 7-6 என்ற நேர் செட்களில் அவர்கள் தோல்வியை தழுவி வெளியேறினர்.

* யாருக்கு வெற்றி?
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்ற போட்டிகளில், அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா, ஜெர்மனியின் லாரா சிக்மண்ட், செர்பியாவின் ஒல்கா டேனிலோவிக், ரஷ்யாவின் அனஸ்தாஸியா பாவ்லியுசென்கோவா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், டென்மார்க்கின் கிளாரா டாசன், கனடாவின் லேலா பெர்னாண்டஸ், உக்ரைனின் மார்தா கோஸ்ட்யுக், போலந்தின் மேக்தலேனா பிரெக் ஆகியோர் வென்று 3ம் சுற்றுக்கு முன்னேறினர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்ற போட்டிகளில், போர்ச்சுகல் வீரர் நுனோ போர்ஜஸ், செக் வீரர் டோமஸ் மெகாக், ஸ்பெயின் வீரர் ராபர்டோ கார்பெலாஸ் பீனா, செக் வீரர் ஜிரி லெஹெக்கா, பிரான்ஸ் வீரர்கள் ஆர்தர் பில்ஸ், பெஞ்சமின் பான்ஸி வென்று 3ம் சுற்றுக்கு முன்னேறினர்.

The post 3வது சுற்றுக்கு முன்னேறினார் சபாஷ் சபலென்கா! ஜோகோவிச் அல்காரஸ் காப் அபாரம் appeared first on Dinakaran.

Tags : Sabalenka ,Djokovic ,Alcaraz ,Melbourne ,Australian Open women's ,Grand Slam ,Aryna Sabalenka ,Coco Gab ,Novak Djokovic… ,Dinakaran ,
× RELATED 14 சிக்சருடன் 157 ரன் சர்ப்ராஸ் கானின்...