திருவாரூர், ஜன.4: திருவாரூர் மாவட்ட தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் வரும் 21 மற்றும் 22 தேதிகளில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலும், அதன் பின்னர் மாநில அளவிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2024-25ம் ஆண்டிற்கு திருவாரூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி, தனியார் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் அரசுக்கல்லூரி, அரசு உதவிபெறும் கல்லூரி, தனியார் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெறும் இப்போட்டியில் வரும் 21ந் தேதி பள்ளி மாணவர்களுக்கும், 22ந் தேதி கல்லூரி மாணவர்களுக்கும் நடைபெறுகிறது.
போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கும் பள்ளி, கல்லூரியிலிருந்து ஒரு மாணவர் வீதம், 3 போட்டிகளுக்கு 3 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் பள்ளி, கல்லூரியிலிருந்து பரிந்துரை கடிதத்துடன் கலந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் போட்டி நடைபெறும் இடத்திற்கு காலை 9.30 மணிக்குள் வருகை தர வேண்டும். மேலும் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் குறித்த விபரங்களை சம்மந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகள் வரும் 17ந் தேதி மாலை 4 மணிக்குள் tamilvalar.tvr@gmail.com என்ற மின்னஞசல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்போட்டிகள் தொடர்பாக மேலும் விவரம் அறிய விரும்புவோர் கலெக்டர் அலுவலக 3ம் தளத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலும், 04366 224600 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.
The post பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் appeared first on Dinakaran.